பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள 10,889 மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாநில அரசின் உத்தரவின் பேரில் இது தொடர்பான வழிகாட்டுதல்களின்படி காவல் துறை உரிமம் வழங்கியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்காக மொத்தம் 17,850 விண்ணப்பங்கள் முன்னதாக அரசால் பெறப்பட்டன.
இதில், 10,889 மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த தற்போது கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதேபோல், மூன்றாயிரம் இந்து கோயில்களுக்கும், 1,400 தேவாலயங்களுக்கும் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசு கட்டணமாக 450 ரூபாய் வசூலித்துள்ளது.
கர்நாடகாவில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி பாங்கு ஓதும்போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்திய மசூதிகளுக்கு எதிராக வலதுசாரி ஆர்வலர்கள் முன்னதாக புகார்களை எழுப்பினர். ஒலி மாசு விதிகளை மீறும் வகையில் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவதை தடை செய்யுமாறும் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மசூதி மேலாளர்கள் ஒலிக்கட்டுப்பாடு விஷயத்தில் மாநில அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும், விதிமுறைகளை மீற வேண்டாம் என்றும் முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தின.
மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் என அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஒலிபெருக்கிகளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரிந்துரைக்கப்பட்ட டெசிபல் வரம்புக்கு உள்பட்ட ஒலி அளவில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துபோது டெசிபல் அளவைக் கட்டுப்படுத்தும் கருவிகளைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.