வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 'சித்ரங்' புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தால் சித்ரங் என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி செவ்வாய்கிழமை மேற்கு வங்கம்-வங்காளதேச கடற்கரையை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


திங்கட்கிழமை காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், இதனால் வடகிழக்கு பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 200 மி.மீ வரை மழை பெய்யும் என்பதால் இதனால் திரிபுரா மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திரிபுரா, அசாம், மிசோரம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர அருணாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு "ஆரஞ்சு அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.


புயல் எச்சரிகையை அடுத்து திரிபுரா அரசு அனைத்து கல்வி நிறுவனங்களையும் அக்டோபர் 26 வரை மூட உத்தரவிட்டுள்ளது.


சூறாவளி புயலால் பாதிக்கப்படக்கூடிய வடகிழக்கு மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை எனப்படும் என்டிஆர்எஃப் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் பகுதிகளில் கூடுதல் படைகளை அனுப்புமாறு முன்னெச்சரிகையாக மாநில அரசுகள் என்டிஆர்எஃப் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளன.


மூன்று தெற்கு அசாம் மாவட்டங்கள் -- கச்சார், கரீம்கஞ்ச் மற்றும் ஹைலகண்டி ஆகிய பகுதிகளிலும்; மிசோரமின் அனைத்து 11 மாவட்டங்களிலும், திரிபுராவின் அனைத்து 8 மாவட்டங்களிலும், நாகாலாந்தின் 16 மாவட்டங்களிலும் விடுக்கப்பட்ட எச்சரிகையை அடுத்து "ரெட் அலர்ட்" நிலையில் உள்ளன.




திரிபுரா அரசு அடுத்த ஒரு வாரத்திற்கு அனைத்து அதிகாரிகளின் விடுமுறையையும் ரத்து செய்துள்ளது. திரிபுரா அரசு அக்டோபர் 25 மற்றும் 26 தேதிகளில் மாநிலம் முழுவதும் வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துதல், போதுமான அளவு நிவாரணப் பொருட்களை சேமிப்பதுடன் போதுமான அளவு  நிவாரணங்களை விநியோகிப்பது உள்ளிட்ட சில நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.