கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வரும்  இந்த நிலையில், அந்த மாநில அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிர்ச்சி தந்த காங்கிரஸ் அரசு: பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 3.50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல் மீதான கர்நாடகா விற்பனை வரி (KST) 25.92 சதவீதத்தில் இருந்து 29.84 சதவீதமாகவும், டீசல் மீதான விற்பனை வரி 14.3 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து கர்நாடக பெட்ரோல் டீலர்கள் சங்கம் வெளியிட்ட தகவலில், "பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.88.94 ஆகவும் உயரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. "பிற்பகலில் அறிவிப்பைப் பெற்று, திருத்தப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப விலைகளை மாற்றி அமைத்தோம்" என கர்நாடக பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பசவேகவுடா தெரிவித்துள்ளார்.


மக்களவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 99.84 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 85.93 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கடந்த 2021ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், பெட்ரோல், டீசல் விலை கடைசியாக மாற்றி அமைக்கப்பட்டது. கோவிட்-19 க்குப் பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.13.30 ஆகவும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.19.40 ஆகவும் குறைத்தது அப்போதைய பாஜக அரசு.


சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் 5 உத்தரவாதங்களை அறிவித்தது. இதை நிறைவேற்றுவதற்காக காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி முதல் ரூ.60,000 கோடி வரை செலவிட வேண்டியுள்ளது.


இதுகுறித்து கர்நாடக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த நிதியாண்டில் சுமார் 2,500 கோடி ரூபாய் முதல் 2,800 கோடி ரூபாய் வரை திரட்ட இந்த எரிபொருள் விலை உயர்வு உதவும்" என்றார்.


தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதியை திரட்ட சொத்துக்களின் வழிகாட்டுதல் மதிப்பை 15-30 சதவீதம் வரை கர்நாடக அரசு உயர்த்தியது. அதேபோல, இந்தியத் தயாரிப்பான மதுபானங்களுக்கு (ஐஎம்எல்) கூடுதல் கலால் வரி (ஏஇடி) அனைத்து அடுக்குகளிலும் 20 சதவீதம் விதிக்கப்பட்டது.


காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள்: கர்நாடகா முழுவதும் ஏசி வசதி இல்லாத அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண திட்டத்தை காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வருகிறது. மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. ஒவ்வொரு பெண் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2,000 ரூபாய் வழங்கி வருகிறது.


வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ உணவு தானியங்களை (அரிசி, ராகி, ஜோவர், தினை) வழங்கி வருகிறது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000; மற்றும் பட்டய படிப்பு முடித்துவிட்டு வேலை இன்றி இருப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கி வருகிறது.