இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. 2 முறை தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி செய்த மோடி, இம்முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு 3வது முறையாக தொடர்ச்சியாக பிரதமராக பதவியேற்றுள்ளார். கடந்த ஜூன் 9 ஆம் தேதி பதவியேற்ற மோடி, முதல் பயணமாக இத்தாலிக்கு புறப்பட்டு சென்றார். ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த ஜூன் 13 ஆம் தேதி புறப்பட்டு சென்றார். 






புறப்படுவதற்கு முன் அவர் வெளியிட்ட அறிக்கையில், G-7 உச்சிமாநாட்டிற்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக இத்தாலி செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் ஆகியவை பற்றி உரையாற்றப்போகிறேன் என தெரிவித்திருந்தார். தெற்கு இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடந்த ஜி7 மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் பிரதமர் மோடி மற்றும்  இத்தாலிய பிரதமரான ஜார்ஜியா மெலோனி ஆகியோர் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலானது. செல்ஃபி வீடியோவை மெலோனி வெளியிட்டார். தொடர்ந்து போப் பிரான்சிஸை சந்தித்தார் பிரதமர் மோடி. 






பிரதமர் மோடி இத்தாலி பயணத்தில் பல்வேறு நாட்டு உலக தலைவர்களுடன் இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே அவுட்ரீச் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி,  வரும் காலத்தை 'பசுமை சகாப்தமாக' மாற்ற நாம் ஒன்றாக முயற்சி செய்ய வேண்டும். உலகளாவிய தெற்கு நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகளை உலக அரங்கில் வைப்பதை இந்தியா தனது பொறுப்பாகக் கருதுகிறது என கூறினார். பின்னர் இன்று காலை இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.