பள்ளி மாணவர்கள் பையில் ஆணுறை:


கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவியரிடையே மொபைல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளிலும், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பைகளில் கடந்த நவம்பர் மாதம் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில மாணவர்களின் பைகளில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஆணுறை, கருத்தடை மாத்திரை, சிகரெட்டுகள் 'லைட்டர்'கள், போதைக்காக பயன்படுத்தும் 'ஒயிட் னர்'கள், அதிகமான பணம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. மாணவர் ஒருவரின் தண்ணீர் பாட்டிலில், மதுபானம் நிரப்பப்பட்டிருந்தது. இது கல்வித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே அரசு சார்பில் உரிய கவுன்சிலிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். 


ஆணுறை வாங்க வயது வரம்பு நிர்ணயம்:


இதுதொடர்பான விசாரணைக்கு பின்னர், கர்நாடக மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு துறை 18 வயது குறைவானவர்களுக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், வலிநிவாரணி மருந்துகள் போன்றவற்றை விற்க தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், சிறார்கள் இடையே எதிர்பாராத கருத்தரிப்பு, பாலியல் சார்ந்த நோய் பரவல் மட்டுமின்றி, அவர்கள் மேலும் பல தவறான பாதைக்கு செல்லக்கூடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்தனர்.  கருத்தடைக்கான பாதுகாப்பு சாதனங்களுக்கு தடை விதிப்பது முறையல்ல எனவும் வலியுறுத்தினர்.


அரசு தரப்பு விளக்கம்:


சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி, மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் , எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து கர்நாடக அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து புதிய விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஆணுறை விற்பனை செய்ய தடை எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால்,  ஆணுறை கோரி கோரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மருந்தக ஊழியர்களே உரிய கவுன்சிலிங்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான உரிய வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும் எனவும் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:


அதேநேரம், மருந்தகங்களில் கவுன்சிலிங் என்பதற்கு பதில் முழுமையான மற்றும் முறையான பாலியல் கல்வியை, கல்வி நிலையங்களிலேயே போதிப்பதன் மூலமே, மாணவர்கள் இடையே பாலியல் உறவு தொடர்பான சரியான தெளிவு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.