கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இன்று மீண்டும் இணைந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.


பாஜகவில் மீண்டும் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர்:


இதனால், கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர், தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி அவருக்கு வாய்ப்பு அளித்த போதிலும், அவர் தோல்வியை தழுவினார். இருப்பினும், அவருக்கு சட்டமேலவை உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.


இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவுடன் டெல்லிக்கு சென்ற ஜெகதீஷ் ஷெட்டர், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷாவை சந்தித்து பேசினார். பின்னர், பாஜக தலைமை அலுவலகத்தில் கர்நாடக பாஜக தலைவர் பி. ஒய். விஜயேந்திரா முன்னிலை பாஜகவில் மீண்டும் இணைந்தார்.


இதுகுறித்து பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், "நான் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்கிறேன் (காங்கிரஸ் அளித்த பதவி). நான் ஏற்கனவே எனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டேன். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு தெரிவித்துவிட்டேன்.


கர்நாடக அரசியலில் திருப்பம்:


பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என்னை பாஜகவுக்கு திரும்புமாறு வற்புறுத்தி வந்தனர். குறுகிய காலத்தில் கட்சியில் தன்னை நன்றாக நடத்தியதற்காக காங்கிரஸுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.


குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த சித்தராமையா, "அவர் (ஷெட்டர்) பாஜகவுக்கு சென்றுவிட்டார் என்பது எனக்குத் தெரியாது. காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக செய்தியாளர் சந்திப்பில் ஏதேனும் கூறியுள்ளரா?


அவருக்கு பாஜக தலைமை அவமரியாதை செய்ததற்காகவும், கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதற்காகவும் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகினார். காங்கிரஸில் சேர்ந்தார். ஹூப்பள்ளியில் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் தேர்தலில் தோல்வியடைந்தார். இருந்தும் கட்சி அவரை எம்எல்சி ஆக்கியது. காங்கிரஸில் ஷெட்டருக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. காங்கிரஸில் மரியாதையுடன் நடத்தப்பட்டார்" என்றார்.


ஹூப்ளி ஊரக தொகுதியில் இருந்து மூன்று முறையும் ஹூப்ளி - தர்வாட் மத்திய தொகுதியில் இருந்து மூன்று முறையும் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டும் இன்றி, சபாநாயகராவும் அமைச்சராக பல முக்கிய துறைகளையும் தன் வசம் வைத்திருந்தார்.