உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் சமீபத்தில் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் கடந்த சில தினங்களாக படையெடுத்து வருகின்றனர்.


ஹனிமூனுக்கு பதில் அயோத்தி:


மத்திய பிரதேசம் போபாலில் வசித்து வரும் மென்பொருள் பொறியியல் பட்டதாரி மிகப்பெரிய ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், இவர் தனது மனைவியை தேனிலவிற்கு கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கு அழைத்துச் செல்வதாக உத்தரவாதம் அளித்துள்ளார். அவரது மனைவியும் கோவா செல்லும் ஆசையில் இருந்துள்ளார்.


அப்போது, ராமர் கோயில் திறப்பு விழாவும் வந்ததால் அந்த என்ஜினியரின் தாயார் தான் ராமர் கோயில் திறப்பு விழாவை பார்கக ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில், தேனிலவிற்கு செல்வோம் என்று ஆசையாக காத்திருந்த மனைவியிடம், தேனிலவிற்கு செல்வதற்கு ஒரு நாள் முன்பாக அவரது கணவர் கோவாவிற்கு பதிலாக நாம் அயோத்தி செல்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும், இது தனது தாயாரின் நீண்ட நாள் ஆசை என்றும் கூறியுள்ளார்.


விவாகரத்து கேட்ட மனைவி:


இதனால், அவரது மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆனாலும், தனது கணவர் மற்றும் மாமியாருடன் இணைந்து அயோத்திக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனமும் செய்துவிட்டு போபால் திரும்பியுள்ளனர். போபால் திரும்பிய கணவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது கணவன் தன்னை தேனிலவிற்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு, அதற்கு பதிலாக அயோத்திக்கு அழைத்துச் சென்றுவிட்டதாகவும் அதனால் தனக்கு விவாகரத்து வேண்டுமென்றும் வழக்குப்பதிவு செய்துள்ளார்.


இதனால், அந்த பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தேனிலவிற்கு பதிலாக அயோத்திக்கு அழைத்துச் சென்ற கணவனிடம் மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: போலீஸ் முன் மோதிக்கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் - விழுப்புரத்தில் பரபரப்பு


மேலும் படிக்க: மாயமான இளம் ஆசிரியை! உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு - பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?