பஞ்சாப்பில் ஒற்றை கோழிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் பின்னணி குறித்து காணலாம். 


பொதுவாக திருவிழா காலங்களில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்படும். அதுவே உயிரினங்களைக் கொண்டு நடத்தப்படும் பண்டிகைகளுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. புறா பந்தயம், சேவல், கிடாய், எருது விடும் விழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் என பல வகைகளில் இந்த போட்டிகளானது நடத்தப்படும். ஆனால் உயிரினங்கள் தொடர்பான போட்டிகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் தடையும் அமலில் உள்ளது. 


இப்படியான நிலையில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரத்தில் உள்ள பல்லுவானா என்ற கிராமத்தில் சேவல் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதில் பங்கேற்ற சேவல் துன்புறுத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். ஆனால் போலீசார் விரட்டி பிடித்ததில் இரண்டு சேவல்கள் மற்றும் ஒரு நபர் மட்டுமே பிடிபட்டார்கள். 


இதனைத் தொடர்ந்து சண்டையில் காயமடைந்த சேவலுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் உணவு வழங்கப்பட்டு அதற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போட்டியில் ஜெயித்தால் வழங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த 11 கோப்பைகளும் மீட்கப்பட்டுள்ளன. மூன்று குற்றவாளிகளில் ஒருவரான ராஜ்விந்தர் மீது விலங்கு வதை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டார்.


அதேசமயம் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சேவல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த கோழியை போலீசார் தங்கள் காவல் நிலையத்தில் உள்ள ஒருவரிடம் விட்டுச் சென்றுள்ளனர்.


போலீஸ் ஸ்டேஷனில் வைத்தால் தனிமையாகிவிடும் என்பதால், கோழியை பராமரிக்கும் பொறுப்பு ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், கோழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், நேரில் சென்று பார்வையிட்டு அதன் சிகிச்சை பற்றி விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கோழிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.