கர்நாடகாவில் 14 வயது பட்டியலின சிறுவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து, பத்து பேர் சேர்ந்து காதணியைத் திருடிச் சென்றதாகக் கூறி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். சிறுவனை தாக்கும்போது, அவரின் தாயார் தலையிட முயன்றபோது தானும் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். படுகாயம் அடைந்து இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 






இருப்பினும், தாய் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவன் இருவருக்கும் பலத்த காயங்கள் எதுவும் இல்லை என்றும், அவர்கள் ஆபத்தான நிலையை தாண்டிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


செப்டம்பர் 29 அன்று பெங்களூரு அருகே நடந்த இச்சம்பவத்தில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த யஷ்வந்த் என்ற சிறுவன், காதணியைத் திருடியதாக வேறு சமூகத்தைச்  சேர்ந்த குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, மின் கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு அவர் தாக்கப்பட்டார்.


இதுகுறித்து சிறுவனின் தாய் கூறியதாவது, "எனது மகன் மற்ற சிறுவர், சிறுமிகளுடன் விளையாடும்போது காதணியை திருடிவிட்டதாக கூறி அடித்தவர்கள், எங்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்" என்றார். பட்டியலின சாதி/பழங்குடியினர் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.


இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதல் தகவல் அறிக்கையில் 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மூவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. நான்கு வயது சிறுமியின் காதணியை சிறுவன் திருடிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். விசாரணை நடந்து வருகிறது" என்றார்.


பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதியத்திற்கு எதிராக பல தலைவர்கள் போராடினாலும், அது ஒழிந்த பாடில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சாதிய ஆணவ படுகொலைகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முற்றிப்புள்ளி வைத்தபாடில்லை. 


சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த வந்த போதிலும், காவல்துறை மெத்தனமான நடந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இதற்கென தனி சட்டம் இயற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில், இளவரசன், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்குகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. முற்போக்கு மாநிலம் எனக் கூறப்படும் தமிழ்நாட்டிலேயே இதுபோன்ற கொலைகள் நடைபெறுவது பிரச்சினையின் தீவிரத்தன்மை நமக்கு உணர்த்துகிறது.