ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கு எதிரான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் பதவியை குறிவைத்து கர்நாடக காங்கிரஸில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றப்படுகிறாரா?
முதலமைச்சர் பதவியில் சித்தராமையாவே தொடர்ந்து நீடிப்பார் என கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர். இருப்பினும், ஊழல் வழக்கில் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் முதலமைச்சர் பதவி தனக்கே வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எம்.பி. பாட்டீல், சிவானந்த் பாட்டீல் ஆகியோர் வெளிப்படையாகவே மோதி வருகின்றனர். இதுகுறித்து சிவானந்த் பாட்டீல் கூறுகையில், "கட்சிக்காக உழைத்தவர்கள் ஏராளம்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் (டிகே சிவக்குமார்) கடுமையாக உழைத்து கட்சியை கட்டி எழுப்பினார். அவர் முதலமைச்சர் ஆக விரும்பினார். ஆனால், இறுதியில் வேறு ஒருவர் முதல்வர் ஆனார். மற்றவர்களுக்கும் ஜூனியர்களுக்கும் முதல்வர் ஆகும் வாய்ப்பு தரப்பட வேண்டும்.
போட்டா போட்டி போடும் தலைவர்கள்:
சித்தராமையாவும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்ததை எம்.பி. பாட்டீல் மறந்துவிட்டார். இதை நான் அவருக்கு நினைவூட்ட மாட்டேன். கட்சியில் அவருக்கு (எம்.பி. பாட்டீல்) சீனியர்கள் பலர் உள்ளனர். கட்சியில் மூத்தவர்கள் இல்லையா? அவர் காத்திருக்க வேண்டும். மூத்தவர்கள் இருக்கும்போது நீங்கள் காத்திருக்கக் கூடாதா? என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய எம்.பி. பாட்டீல், "கட்சி முடிவு செய்து உங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் (முதல்வர் பதவிக்கு), சீனியர், ஜூனியர் என்ற கேள்விக்கே இடமில்லை. இன்றைய நிலவரப்படி, (முதல்வர் பதவி) காலியாக இல்லை.
ஆனால், ஒரு நாள், இயல்பாக, எனக்கு அந்த பதவி கிடைக்கும். அதில், எனக்கு நம்பிக்கை உள்ளது. ஜேடிஎஸ்/பாஜகவில் இருந்து வந்துள்ளதால், சிவானந்த் பாட்டீலுக்கு வாய்ப்பு வெகு தொலைவில் உள்ளது" என்றார்.
எம்.பி. பாட்டீல், சிவானந்த் பாட்டீலை தவிர கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியும் முதலமைச்சராக முயற்சி செய்து வருகின்றனர்.