மல்யுத்த வீரர்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்க வேண்டாம் என பாலியல் புகாரில் சிக்கியுள்ள மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு பாஜக மேலிடம் அறிவுரை கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக மேலிடம் போட்ட உத்தரவு: பிரிஜ் பூஷன் சிங் மீது வினேஷ் போகத், சாக்ஸி மாலிக் உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் விளையாட்டு உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்கள் மேற்கொண்ட போராட்டம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பின.
ஆனால், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் யாவும் காங்கிரஸ் கட்சியின் சதி வேலை என பிரிஜ் பூஷன் கூறியிருந்தார். இரண்டு நாள்களுக்கு முன்புதான், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இதை மேற்கோள் காட்டி மல்யுத்த வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரிஜ் பூஷன், "புனியாவும் போகத்தும் வெளியே தெரியும் முகங்கள் மட்டுமே. அவர்கள் வெறும் சிப்பாய்கள். முன்னாள் ஹரியானா முதலமைச்சர் பூபிந்தர் ஹூடா, காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் குடும்பத்தினரால் சிப்பாய்களாகப் பயன்படுத்தப்பட்டனர்.
நடந்தது என்ன? இவை அனைத்தும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பைப் கைப்பற்றவும் பாஜக மற்றும் அதன் சித்தாந்தத்தைத் தாக்க மேற்கொள்ளப்பட்ட சதி. ராகுல் (காந்தி), காங்கிரஸின் இந்தக் கும்பல் இவற்றைச் செய்து கொண்டே இருக்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு, ஜனவரி 18ஆம் தேதி, மல்யுத்த வீரர்களின் போராட்டங்கள் தொடங்கியபோது, இது மல்யுத்த வீரர்களின் போராட்டம் அல்ல என்றும், அதன் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது என்றும் முதல் நாளிலேயே கூறியிருந்தேன்.
வினேஷ் போகத், ஒரே நாளில் இரண்டு எடை பிரிவுகளுக்கான சோதனை சுற்றில் கலந்து கொண்டார். ஐந்து மணி நேரம் சோதனைகளை நிறுத்தி வைத்தார். 53 கிலோ பிரிவில் 10-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த அவர், 50 கிலோ பிரிவில் போராடினார்.
ஷிவானி பவார் 5-1 என்ற கணக்கில் வென்றார். ஆனால், ஒரு சலசலப்பை உருவாக்கி, நடுவர்கள் நேர்மையற்ற முறையில் ஈடுபட்டு, போகத்தை வெற்றியாளராக அறிவித்தனர். அதற்கான முடிவை, ஒலிம்பிக் முடிவு மூலம் கடவுள் கொடுத்துவிட்டார்" என்றார்.
பிரிஜ் பூஷன் சிங்கின் இந்த கருத்து பெரும் சர்ச்சையான நிலையில், மல்யுத்த வீரர்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்க வேண்டாம் என பாஜக மேலிடம் அறிவுரை கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.