கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை விசாரித்து வந்த கர்நாடக சிஐடி அதிகாரிகள், பெங்களூரு விரைவு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.


கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி, 17 வயது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் எடியூரப்பா மீது போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டது.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறுகையில், "இந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி டாலர்ஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு சந்திப்பின் போது எனது மகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார்" என்றார்.


இதற்கு மறுப்பு தெரிவித்த எடியூரப்பாவின் வழக்கறிஞர், "நான் இதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். அவர் (அம்மா) வழக்குகள் தொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். விவரம் கொடுத்துள்ளேன். பிளாக்மெயில் செய்வது அவரது வழக்கம்" என்றார்.


இதற்கிடையே, வழக்கின் விசாரணையை சிபி-சிஐடி மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஆனால், திடீர் திருப்பமாக எடியூரப்பா மீது புகார் அளித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் நுரையீரல் புற்றுநோயால் கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.


தன் மீது சுமத்தப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த எடியூரப்பா, "மோசடி வழக்குகளில் உதவி கேட்டு அந்த சிறுமி என்னிடம் வந்தார். இருப்பினும், அவர் என்னிடம் சரியாகப் பேசாததால், அவர் மனநிலை சரியில்லாமல் இருக்கலாம் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது" என்றார்.