மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் அமைந்ததை தொடர்ந்து 18ஆவது மக்களவையின் முதல் அமர்வு கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.பி.க்கள் பதவியேற்று இன்று நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடந்தது. 


பூதாகரமாக வெடித்த செங்கோல் சர்ச்சை: இரண்டு அவை எம்.பி.க்கள் மத்தியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ஆர்.கே. சௌத்ரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


அது தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்தாண்டு, புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும்போது மக்களவை மைய மண்டபத்தில் நிறுவப்பட்ட செங்கோலை அங்கிருந்து அகற்ற வேண்டும் என ஆர்.கே. சௌத்ரி வலியுறுத்தியுள்ளார்.


முடியாட்சியின் சின்னமான செங்கோலை அகற்றிவிட்டு அரசியல் சாசன புத்தகத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய ஆர்.கே. சௌத்ரி, "அரசியலமைப்பு என்பது ஜனநாயகத்தின் சின்னம். முந்தைய ஆட்சியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியது.


நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? 'செங்கோல்' என்றால் 'ராஜ்-தண்ட்' (அரசரின் தடி). சமஸ்தானத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, நாடு சுதந்திரம் பெற்றது. நாடு 'அரசரின் தடியால்' ஆட்சி செய்யப்படுமா அல்லது அரசியலமைப்பால் ஆட்சி செய்யப்படுமா?


நமது நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் ஆலயமே தவிர ஏதோ ஒரு ராஜ்ஜியத்தின் அரண்மனை அல்ல. எனவே, அரசியலமைப்பை காப்பாற்ற நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று கோருகிறேன்" என்றார்.


சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கைக்கு இந்தியா கூட்டணி ஆதரவு தெரிவித்தபோதிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராம் விலாஸ் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் இதுகுறித்து பேசுகையில், "இத்தகைய சின்னங்கள் பல ஆண்டுகளாக தவறாக காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


பொங்கி எழுந்த உத்தர பிரதேச முதலமைச்சர்: ஆனால், இன்று நமது பிரதமரால் அவற்றுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும்போது, ​​இவற்றை எல்லாம் கண்டு நீங்கள் ஏன் புண்படுகிறீர்கள்? ஏன் இந்த எதிர்கட்சி தலைவர்களால் நேர்மறை அரசியலை சிந்திக்க முடியவில்லை?" என்றார்.


இந்த நிலையில், இந்தியா கூட்டணி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பாஜக மூத்த தலைவரும் உத்தர பிரதேச முதலமைச்சருமான யோகி ஆதித்யநாத், இந்திய வரலாற்றையும் தமிழ் கலாசாரத்தையும் அவமதிப்பதாக கூறியுள்ளார்.


 






இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "சமாஜ்வாதி கட்சிக்கு இந்திய வரலாற்றின் மீதோ கலாச்சாரத்தின் மீதோ மரியாதை இல்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சி தலைவர்களின் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை. அவர்களின் அறியாமையை சுட்டிக்காட்டுகின்றன.


குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தின் மீதான இந்திய கூட்டணியின் வெறுப்பையும் இது காட்டுகிறது. 'செங்கோல்' இந்தியாவின் பெருமை. கௌரவப் பிரச்னையாகும். நாடாளுமன்றத்தில் அதற்கு, பிரதமர் மோடிதான் மிக உயர்ந்த மரியாதை அளித்தார்" என்றார்.