பெண்களின் உடல் மற்றும் மன நலனைக் கவனத்தில் கொண்டு, நாட்டில் முதல் முறையாக கர்நாடக அரசு, அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் விடுமுறையை வழங்கும் தீர்மானத்தை எடுத்து வர உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் இந்தக் கொள்கை, பெண்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதவிடாய் விடுமுறை திட்டம் அறிமுகம்
கர்நாடக அரசு “மாதவிடாய் விடுப்பு கொள்கை 2025” எனப்படும் புதிய திட்டத்தை கொண்டு வரத் தயாராகியுள்ளது. இந்தக் கொள்கை பெண் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருப்பு
கர்நாடக அமைச்சரவை வியாழக்கிழமை கூடும் போது இந்தக் கொள்கையை விவாதித்து ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் துறை இதற்கான நிர்வாக ஒப்புதலை ஏற்கனவே கோரியுள்ளது.
இந்தக் கொள்கை அரசு அலுவலகங்கள், ஆடை தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் துறைகளுக்கும் கட்டாயமாகும். இதனால், மாநிலம் முழுவதும் பணிபுரியும் அனைத்து பெண்களும் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை பெறுவார்கள்.
மற்ற மாநிலங்களின் நிலை
கேரளா அரசு, தொழில்துறை பயிற்சி நிறுவனங்களின் (ITI) பெண் பயிற்சியாளர்களுக்கு இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பை ஏற்கனவே வழங்கி வருகிறது.
பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் 12 நாள் வருடாந்திர மாதவிடாய் விடுப்பு கொள்கை உள்ளது, ஆனால் அது மாநில அரசு ஊழியர்களுக்கே பொருந்துகிறது.
கர்நாடகா – முழுமையான நடைமுறை
தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், “இந்தக் கொள்கையை முழுமையாக அறிமுகப்படுத்தும் முதல் மாநிலம் கர்நாடகாவாகும். இது அரசு மற்றும் தனியார் துறையிலும் உள்ள அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் பொருந்தும். இது ஒரு முற்போக்கான மசோதாவாக இருக்கும்,” என்றார்.
முதலில், வருடத்திற்கு ஆறு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்க முன்மொழியப்பட்டது. ஆனால் தற்போது அது 12 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
“பெண்கள் அனுபவிக்கும் உடல் வலி, மன அழுத்தம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டது,” என அமைச்சர் கூறினார்.
பெங்களூருவில் பெண்களுக்கு பெரும் நன்மை
பெங்களூருவில் சுமார் ஐந்து லட்சம் ஆடைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர், அவர்களில் 90 சதவீதம் பெண்கள். மேலும், ஐடி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிலும் பல ஆயிரம் பெண்கள் உள்ளனர். “இந்தக் திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், பெரும்பாலான பெண்கள் இதனால் நன்மை அடைவார்கள்,” என அமைச்சர் லாட் தெரிவித்தார்.