தோனி இன்று விமானம் மூலம் மதுரை வரும் நிலையில், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்கு அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஐ.பி.எல்., போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ் பெங்களூர், மும்பை இந்தியன் உள்ளிட்ட அணிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் சென்னை சேப்பாக்கத்திற்கு பிறகு பெரிய கிரிக்கெட் மைதானம் உருவாகியுள்ளது, தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
மதுரையில் கிரிக்கெட் மைதானம்
மதுரை வேலம்மாள் குழுமத்திற்கு பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, சொகுசு ஹோட்டல்கள் என ஏராளமான நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில் வேலம்மாள் குழுமம் சார்பாக மதுரையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் ஜிம், தண்ணீர் உறிஞ்சும் கருவி, மெகா சைஸ் மின்விளக்குகள், ஆம்புலன்ஸ் வசதி, முழு மருத்துவ வசதி, யோகா மையம், டிஜிட்டல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு கிட்டதட்ட 20 ஆயிரம் வரை ரசிகர்கள் அமர்ந்து போட்டியினை ரசிக்க முடியும்.ரூ.350 கோடி செலவில் இந்த மைதானம் அமைக்கப்பட்டதாகவும் தகவல்கள் சொல்லப்படுகிறது. இதற்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மைதான வல்லுநர்களின் ஆலோசனைப் படி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாம். இதன் மூலம் தமிழ்நாடு அளவிளான கிரிக்கெட் போட்டியினை மதுரையில் நடத்த முடியும் என கூறப்படுகிறது. மேலும் அடுத்த, அடுத்த முயற்சியில் ரஞ்சி டிராபி மற்றும் ஐ.பி.எல்., நடத்தும் அளவிற்கு மைதானம் மாற்றியமைக்கப்படும் என நம்பப்படுகிறது.
மைதானத்தை திறந்து வைக்கும் எம்.எஸ்.தோனி
இந்த சூழலில் இன்று அக்டோபர் 9-ஆம் தேதி இந்த மைதானம் திறக்கப்படுகிறது. இதற்காக இந்திய முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி வருகை தந்து மைதானத்தை திறந்து வைக்கவுள்ளார். இதற்காக மதியம் 2:30 மணிக்கு மதுரை விமானநிலையம் வந்து பின்னர், மைதானத்தை திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் ஊருக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்
மதுரை விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்து வருகின்றனர். தோனி இன்று விமானம் மூலம் மதுரை வரும் நிலையில், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.