திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் கர்நாடகாவில் நடந்தேறியுள்ளது. இந்த சோகத்திலும் பெண்ணின் பெற்றோர் மகளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர்.


சைத்ராவின் திருமணமும், கணவருடனான அவரது வாழ்க்கையும் ஒரு கனவாகவே மாறியது. நிம்ஹான்ஸ் மருத்துவர்கள் முயற்சி செய்த போதிலும், சைத்ரா வியாழன் அன்று காலமானார்.


அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் அவரது உறுப்புகளை தானம் செய்தனர். நிம்ஹான்ஸில் இதுவே முதல் உறுப்பு தானம் என்று மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் கூறினார்.


கர்நாடக மாநிலம் கோலார் அடுத்த ஸ்ரீனிவாசபுரத்தில் உள்ள கொடிச்சேரவு கிராமத்தைச் சேர்ந்த சைத்ரா (வயது 26) எம்.எஸ்சி முடித்து ஆசிரியர் பயிற்சிப் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹோஸ்கோட்டைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் அவரது பெற்றோரான ராமப்பா மற்றும் அச்சம்மா திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.


இவர்களது திருமணம் பிப்ரவரி 6 ஆம் தேதி ஸ்ரீபால ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலில் நடத்த திட்டமிடப்பட்டது. அரசியல்வாதிகள், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சியில், இரவு 9 மணியளவில் திருமண வரவேற்பு மேடையில் சைத்ரா சரிந்து விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


உடனே அவர் சீனிவாசபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்த டாக்டர்கள் பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவரை உயிர்ப்பிக்க முயன்றபோது, ​​கடந்த வியாழக்கிழமை அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


ராமப்பா மற்றும் அச்சம்மா மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உயிர்வாழ்விற்காக தேவைப்படும் மற்றவர்களுக்கு உதவ மணப்பெண்ணின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.




சைத்ராவின் இறுதிச் சடங்குகள் அவரது கிராமமான கொடிச்சேரவில் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.


இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர்,  “சைத்ராவின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், உடல் உறுப்பு தானம் செய்வதில் சைத்ராவின் பெற்றோர் எடுத்த முடிவு முன்மாதிரியாகவும், ஆதரவற்றோருக்கு உதவியதாகவும் உள்ளது. அவர் என்றும் நினைவுகூரப்படுவார்” என்று ட்வீட் செய்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண