கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் நேற்று அங்கு பாஜக வாக்குச்சாவடி பிரமுகர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் மே 10 ஆம் தேதி நடக்கும் என கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து அங்கு கடந்த ஒன்றை மாதங்களாக தேர்தல் திருவிழா களைக்கட்டியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, பாஜகவின் மேலிட தலைவர்கள் என பலரும் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். கர்நாடகா சட்டமன்ற 73.19 சதவீதவாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட 306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
மேலும் பெங்களூருவில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் ஒரு லட்சம் போலீசார் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்தே காங்கிரஸ், பாஜக இடையே கடு ம் போட்டி நிலவி வருகிறது. கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ள நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்சிக்கு வரப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இருக்கும் என்பதால் அவர்களின் ஆதரவு யாருக்கு என கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவின் கலபுராகி மாவட்டத்தின் சிஞ்சோலி தாலுகாவில் உள்ள சலகர் பசந்த்பூர் கிராமத்தில் மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் பெயர் ராமு ரத்தோட் என அடையாளம் காணப்பட்டது. மேலும் இறந்தவர் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்குச்சாவடி முகவராக பணியாற்றியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் பாஜக பிரமுகர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது கொலையாக இருக்கலாம் என்பதால் சந்தேக மரணமாக கருதி விசாரிக்க வேண்டும் கூறி ராமுவின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.