கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் படித்து வரும் காஷ்மீர் மாணவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்கள், தங்கள் தாடியை வெட்ட வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் சங்கத்தின் தலையீடு காரணமாக அந்த கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
முஸ்லிம் மாணவர்களுக்கு பாகுபாடா?
கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு பேச்சு குறித்து தினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள ஹோலேநரசிபுரா பகுதியில் அமைந்துள்ள அரசு செவிலியர் கல்லூரியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் படித்து வருகின்றனர். அவர்கள் மீது சில புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, ஆடை தொடர்பான விதிகளை அவர்கள் பின்பற்றுவதில்லை என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், தாடியை டிரிம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் சங்கம் தலையீட்டதன் காரணமாக பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
தாடியால் எழுந்த சர்ச்சை:
இதுகுறித்து கல்லூரியின் இயக்குநர் டாக்டர் ராஜண்ணா கூறுகையில், "ஹோலேநரசிபுராவில் நர்சிங் கல்லூரி ஒன்று உள்ளது. அதில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் சிலர், கல்லூரிக்கு சரியான நேரத்தில் வருவதில்லை என புகார் வந்தது.
அவர்களின் ஆடை குறித்தும் புகார்கள் வந்தன. நீண்ட தாடியும் வைத்திருந்தனர். தாடியை மாணவர்கள் டிரிம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கத்தில் இதுகுறித்து மாணவர்கள் புகார் செய்தனர்.
பின்னர், இந்த விவகாரம் எங்களுக்கு தெரியவந்தது. நாங்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினோம். அதன் பிறகு, கருத்து சுதந்திரம் அனுமதிக்கப்பட்டது. தற்போது இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என்றார்.
இதுகுறித்து காஷ்மீர் மாணவர் ஒருவர் கூறுகையில், "தாடி வைத்து கொள்வது தொடர்பான விவகாரம் முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் தீர்க்கப்பட்டது. தாடி வைக்க நிர்வாகம் அனுமதித்துள்ளது. நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம்.
தற்போது எந்த பிரச்சனையும் இல்லை. எதுவும் நடக்காது (இந்தப் பிரச்சினையில்) நாங்கள் பாதுகாப்பாக உணர முடியும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்" என்றார்.