நடிகை கஸ்தூரி தலைமறைவு


தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சையில் சிக்கிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகியுள்ளார். சென்னை எழும்பூர் போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


நடிகர் டெல்லி கணேஷ் காலமானர்


தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகரான டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில், 400-க்கும் அதிகமான படங்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.


நவ.12ம் தேதி முதல் பருவமழை தீவிரம்?


தமிழ்நாட்டில் வரும் 12ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடங்கும் எனவும் எச்சரித்துள்ளார்.


”தமிழக அரசு ஆன்மீக அரசு”


”தமிழக அரசு ஒரு ஆன்மிக அரசு என்பதை மெய்ப்பித்து வருகிறது. அனைத்து முகூர்த்த தேதிகளிலும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. குறிப்பாக பெரிய கோயில்கள் என்று இல்லாமல் சிறிய சிறிய கோயில்களிலும் குடமுழுக்குகள் நடைபெறுவது சாதனை" என தஞ்சாவூரில் தருமபுர ஆதீனம் பேட்டி அளித்துள்ளார். 


தமிழக மீனவர்கள் 23 பேர் கைது


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மீனவர்களின் 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து நடைபெறும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


நீட் பயிற்சி மையத்தில் கொடூரம்


கான்பூரில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  6 மாதங்களாக தன்னை அடிமை போல் வீட்டில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்ததாக சிறுமி குற்றம்சாட்டியுள்ளார். வேதியியல் ஆசிரியரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் உயிரியல் ஆசிரியர் நீட் பயிற்சி மையத்தில் மற்றொரு மாணவியிடம் அத்துமீறிய சிசிடிவி காட்சி வெளியானது. அந்த விவகாரத்தில் அவர் கைதாகி, ஜாமினில் வெளிவந்தார். இதனையறிந்த சிறுமி, தற்போது துணிச்சலாக முன்வந்து புகார் அளித்துள்ளார்.


ராகுல் காந்தி கண்டனம்


"சாமானிய மக்களுக்கு எப்போது பாதுகாப்பு கிடைக்கும் மோடி அவர்களே?" என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பீகாரில் ரயில் இன்ஜின் COUPLINGஐ பிரிக்கும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தல்.


பொய்களை பரப்பிய இந்தியா கூட்டணி


நாடாளுமன்ற மக்களவை தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பொய்களை பரப்பியதாக, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியபோதே 'இந்தியா' கூட்டணியின் உண்மையான நோக்கம் வெளிப்பட்டுவிட்டது. சட்டப்பிரிவு 370-ஐ இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாக வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் அதை நிறைவேற்றியது” எனவும் கூறினார்.


பைடனை சந்திக்கிறார் ட்ரம்ப்


அமெரிக்க அதிபர் பைடனை சந்திக்க வரும் 13ம் தேதி , அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகை சந்திக்க உள்ளார். ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் இப்படி ஒரு சந்திப்பு நடைபெறுவது வழக்கமாகும். ஆனால், கடந்த தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றபோது, இந்த சந்திப்பை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய அணியின் வெற்றி தொடருமா?


இந்தியா தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.