மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 40 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பழங்குடியின கிராமத்தின் பல வீடுகள் அமைந்துள்ள காலாபூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுவரை 16 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி கிராமத்தில் மீட்பு மற்றும் தேடுதல் பணி, தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வசிக்கும் 228 பேரில், 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 93 பேர் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இருப்பினும், மொத்தம் 119 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள 50 வீடுகளில், 17 வீடுகள் நிலச்சரிவால் தரைமட்டமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்.டி.ஆர்.எஃப் மற்றும் ராய்காட் காவல் துறை அதிகாரிகளும் இரண்டாவது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 6.30 மணிக்கு இந்த மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது என்று ராய்காட் காவல்துறை கண்காணிப்பாளர் சோமந்த் கார்கே தெரிவித்தார். மேலும் மீட்பு பணிகளில் மோப்ப நாய் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம், மீட்பு மற்றும் தேடுதல் குழுக்கள் நிலச்சரிவில் இருந்து 16 உடல்களை மீட்டனர், அதே நேரத்தில் 21 பேர் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒன்று முதல் நான்கு வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் மற்றும் 70 வயதுடைய ஒருவரும் அடங்குவர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் சரியான பாதை இல்லாத காரணத்தால் மீட்பு குழுவினர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஆறு முக்கிய ஆறுகளில், சாவித்ரி மற்றும் பாதல்கனகா, அபாயக் குறியைத் தாண்டியுள்ளது. அதேபோல் குண்டலிகா மற்றும் அம்பா ஆறுகள் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது என்றும் காதி மற்றும் உல்லாஸ் எச்சரிக்கை குறிக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது என்றும் மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ராய்காட், பூனே, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்.டி.ஆர்.எஃப் மகாராஷ்டிரா முழுவதும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவ 12 குழுக்களை களமிறக்கியுள்ளது.