இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இன்று பேசினார். இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


இதை தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக பேசினார். "இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது தூதுக்குழுவையும் இந்தியாவிற்கு வரவேற்கிறேன். அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இலங்கை மக்கள் கடந்த வருடம் பல சவால்களை எதிர்கொண்டார்கள். ஆனால், நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுடன் நாங்கள் நெருங்கிய நண்பரைப் போல் தோளோடு தோள் நின்றோம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். 


வர்த்தகம் மற்றும் மக்களின் பயணத்தை அதிகரிக்க, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை தொடங்க முடிவு செய்துள்ளோம். 'அண்டை நாடுகளுக்கே முதலில் முக்கியத்துவம்' என்ற இந்தியாவின் கொள்கை மற்றும் 'சாகர்' திட்டம் ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு முக்கிய இடம் உண்டு. 


இன்று நாங்கள் இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்களும் வளர்ச்சியும் பின்னிப்பிணைந்தவை என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் யுபிஐ சேவையை இலங்கையில் அறிமுகம் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டோம். இது, நிதி தொழில்நுட்ப இணைப்பை மேம்படுத்தும்.


மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் இன்று கலந்துரையாடினோம். மனிதாபிமான அணுகுமுறையுடன் இவ்விவகாரத்தில் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இலங்கையில் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் பேசினோம். அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை பின்பற்றி வருவதாக இலங்கை அதிபர் என்னிடம் கூறினார். 


இலங்கை தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறோம். 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை அமல்படுத்துவதற்கான அந்நாட்டு உறுதிமொழியை அது நிறைவேற்றும் என நம்புகிறோம்" என்றார்.