புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகை மதுபானங்களின் விலை, 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்தாண்டு கொரோனா பரவலின் போது, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில குடிமகன்கள் புதுச்சேரிக்கு வருவதை தடுக்க, மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இது, கடந்தாண்டு மார்ச் 23-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதில், அனைத்து வகை மதுபானங்களுக்கும் கொரோனா வரியாக 25 சதவீதம் விதிக்கப்பட்டது. இதனால், தமிழகத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை உயர்ந்தது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த கொரோனா வரி, கடந்த ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டது.




அதை தொடர்ந்து, மதுபானங்கள் மீண்டும் பழைய விலையில் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அனைத்து வகை மது பானங்களுக்கும், 20 சதவீதம் சிறப்பு கலால் வரி விதித்து, உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மது பானங்களின் விலையும் 20 சதவீதம் உயர்கின்றது. இந்த விலை உயர்வு, இன்று 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இந்தியாவில் தயாரித்த மதுபானங்கள், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மதுபான வகைகளுக்கும் விலை உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குவார்ட்டர் பிராந்தி பாட்டில், தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இனி, இது 120 ரூபாயாக உயரும். இதேபோல, மற்ற மதுபான வகைகளின் விலையும் உயர்கிறது. மதுபானங்களுக்கு ஏற்கனவே கலால் வரி, கலால் கூடுதல் வரி உள்ளது. இந்த நிலையில், புதிதாக, சிறப்பு கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில், சிறப்பு கலால் வரி புதிதாக போடப்பட்டுள்ளது. கடைசியாக, கடந்த 2018-19-ஆம் ஆண்டில், மதுபானங்களின் விலையை, கலால் துறை உயர்த்தி இருந்தது. புதுச்சேரி மாநில மதுக்கடைகளில், 920 மதுபான வகைகள் விற்கப்படுகின்றன.




இவற்றில் 154 மதுபான வகைகள் தமிழகத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன.கடந்தாண்டு கொரோனா வரி விதிப்பின்போது, இந்த 154 மதுபான வகைகள் மீது, தமிழகத்திற்கு இணையாக வரி போடப்பட்டது. மற்ற 766 மதுவகைகளுக்கு 25 சதவீதம் கொரோனா வரி விதிக்கப்பட்டது. கள்ளு, சாராயத்திற்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. இப்போது விதிக்கப்பட்டுள்ள கலால் சிறப்பு வரியில், பீர், விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட அனைத்து வகை மதுபானங்களுக்கும் சராசரியாக 20 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், கள்ளு, சாராயத்திற்கு புதிய வரி விதிக்கப்படவில்லை. தமிழகத்தை காட்டிலும் புதுச்சேரியில் மது விலை மிகவும் குறைவு. அதுவும், பல ரகங்களில் கிடைக்கும்.


இதனால் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில குடிமகன்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து வந்தனர். தற்போது, 'சரக்கு' விலை உயர்ந்துள்ளதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு கஜானாவுக்கு செல்லும் மதுபானக்கடை உரிமையாளர்கள் கலால் வரி, கூடுதல் கலால் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தியே, சரக்குகளை கொள்முதல் செய்கின்றனர்.எனவே, மதுபானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை (எம்.ஆர்.பி.,) விலை தொகை, மதுபானக் கடைக்காரர்களுக்கு செல்லும். புதிதாக விதிக்கப்பட்டுள்ள 20 சதவீத சிறப்பு கலால் வரி, கலால் துறை வாயிலாக அரசு கஜானாவுக்கு சென்றுவிடும்.