வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் 42 சேவைகளும் இனி ஆன்லைன் மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் தொகை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதே சமயம் போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மக்களின் தேவைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களுடன் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், வாகனப் பதிவு, வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம், நாடு முழுவதும் வாகனத்தை கொண்டு செல்வதற்கான நேஷ்னல் பர்மிட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.


இந்த சேவைகளை பெற மக்கள் நீண்ட காலம் ஆர்டிஓ அலுவலகங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வாக ஆர்டிஓ மற்றும் அது தொடர்பான சேவைகளை இணையதளம் வழியாகவே பெற மத்திய அரசு பரிவாகன் என்ற இணையதளத்தை தொடங்கியது. www.parivahan.gov.in என்ற இணையதளத்தில் ஓட்டுநர் உரிமம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், வாகனப் பதிவு, வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை ஆன்லைன் மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.


ஆதார் எண் உள்ளவர்கள் அதனைப் பயன்படுத்தி இந்த சேவையை ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஆதார் எண் இல்லாதவர்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த சேவைகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருவதால் மக்கள் இனி ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்ல தேவையில்லை. மற்ற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு பதிவை மாற்றுவதற்கான தடையில்லா சான்றிதழையும் டிஜிட்டல் முறையில் பெறலாம். அரசின் பரிவாகன் இணையதளத்தில் 42 சேவைகளுக்கான கட்டணத்தையும் இணையத்தளத்திலேயே செலுத்திவிட முடியும். கடந்த மாதம் இந்த திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தமிழ்நாட்டில் இந்த வாரத்திற்குள் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் இந்த இணையத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ தொடர்பான சேவைகள் இணையத்தளம் மூலம் பெற்றுக்கொள்வதால்  இடைத்தரகர்கள், ஏஜெண்டுகள் தலையீடு இருக்காது என கூறுகின்றனர். அதேபோல் வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது, அலைச்சல் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


CM Stalin In Singapore: சிங்கப்பூர் பயணத்தின் இரண்டாவது நாளில் முதலமைச்சர் ஸ்டாலின்.. முதலீட்டாளர்கள் உடன் சந்திப்பு!


TN Weather Update: இன்று வெப்பநிலை எப்படி இருக்கும்? கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்ன தெரியுமா? இன்றைய வானிலை நிலவரம் இதோ..