சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அந்நாட்டை சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.


முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம்:


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் விதமாக, வரும் 2030-31ம் நிதி ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படுத்துவதை இலக்காக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைய ரூ.23 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதுடன், 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்க வேண்டும். அதன் ஒரு அங்கமாக அடுத்த ஆண்டு, தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவரவும், வரும் 2024 ஜனவரியில் சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் அரசுமுறை பயணமாக, சிங்கப்பூருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.




                             சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் உடனான ஆலோசனையின்போது


 


தொழிலதிபர்களை சந்தித்த ஸ்டாலின்:


இதையடுத்து சிங்கப்பூர் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக, செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் சேர்மேன் ஆன, கிம்யின் வாங்கை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து, கேபிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சீவ் தாஸ்குப்தாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள், முதலீட்டாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் உதவிகள் ஆகியவற்றை எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். முன்னதாக, டமாசெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகளின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகளும் முதலமைச்சருடன் இருந்தனர்.


மீன்பிடி துறையில் முதலீடு?


அப்போது, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள்  செய்வதற்கு தங்கள் நிறுவனங்கள்  ஆர்வமாக உள்ளதாகவும், விரைவில் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதாகவும், குறிப்பிட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிலும், டமாசெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா, தமிழ்நாட்டில் மீன்பிடி சார்ந்த தொழில் துறைகளிலும், உணவுப் பதப்படுத்தும் துறைகளிலும் தங்கள் நிறுவனம் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.


அடுத்த திட்டம் என்ன?


தொடர்ந்து, இன்று மாலை நடக்கும் முதலீட்டாளர் மாநாட்டில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம்டிஎன் (FameTN), டான்சிம், மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை சிங்கப்பூர் பல்கலைக்கழகமான SUTD, சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு, சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்கின்றன. சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.


ஜப்பான் பயணம்:


அதைதொடர்ந்து, முதலீட்டு குழுவுக்கு தலைமையேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் செல்கிறார். அங்கு முன்னணி தொழில்துறை தலைவர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். ஜப்பானில் நடைபெறும் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.