தேசப் பெருமைக்காக விளையாடுவதற்கு பதிலாக அவர்களை நாம் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக போராட வைத்து விட்டோம் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


கமல்ஹாசன் ஆதங்கம்:


டெல்லியில் நமது நாட்டு வீரர், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து  போராட்டம் நடத்திவரும் நிலையில், போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், இதையடுத்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 


பிரிஜ் பூஷண் சிங் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என வீரர், வீராங்கனைகள் கூறியிருந்தனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், தேசத்தின் பெருமைக்காக போராட வேண்டிய நமது வீரர், வீராங்கனைகளை தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராடும்படி நிர்ப்பந்தித்துள்ளோம்.  இந்தியர்களே, நாம் கவனிக்க வேண்டியது நமது தேசிய விளையாட்டு வீராங்கனைகளையா? அல்லது குற்ற வரலாற்றைக் கொண்ட அரசியல்வாதியையா? என்று பதிவிட்டுள்ளார். 






முன்னதாக, ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் உள்நாட்டு, சர்வதேச போட்டிகள் பலவற்றில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்கிறது இப்போராட்டம்.


மல்யுத்த வீரர்கள் போராட்டம்


கடந்த ஜனவரி மாதத்தில் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெண் மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர் கைது செய்யப்படும் வரை நாங்கள் வீடுகளுக்கு திரும்பப் போவதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில், போராட்ட களத்தில் இறங்கியுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பல விவசாய அமைப்புகள் மற்றும் காப் பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகள் களமிறங்கியுள்ளனர்.


வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழுவை ஜனவரி 23-ஆம் தேதி அமைக்கப்பட்டது. மேற்பார்வை குழுவில் முதலில் மொத்தம் ஐந்து பேர் சேர்க்கப்பட்டனர். இந்த குழுவின் தலைவராக மூத்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தேர்வு செய்யப்பட்டார்.