பி.எஸ்.எல்.வி.சி. 58 என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது இன்று காலை 9.10 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


அடுத்த கட்டத்துக்கு சென்ற இஸ்ரோ: 


பூமியில் இருந்து சுமார் 650 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது. 25 மணி நேர கவுண்டவுன் முடிந்த பின் இன்று காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள், எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, ஸ்பெக்ட்ரம் போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான 'நெபுலா’ ஆகியவற்றை பற்றி விரிவாக ஆராய ஏதுவாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் (XpoSat) செயற்கைக்கோள் மட்டுமின்றி பிற நாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களையும் சுமந்து செல்கிறது. முக்கியமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த லால்பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிட்டுயூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் ‘வேசாட்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். 


புற ஊதா கதிர்கள்:


இது, விண்வெளி மற்றும் பூமியின் மேற்பரப்பில் உள்ள புறஊதா கதிர்கள் மற்றும் கேரளாவில் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகளில் அவற்றின் தாக்கத்தை ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெண்கள் மேற்பார்வையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்ற பெருமை இந்த வெசாட் செயற்கைக்கோளுக்கே சேரும். இத்துடன் 10 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களும் இந்த பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட் சுமந்து செல்கிறது.


ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்ற செயற்கைக்கோள்:


இந்த நிலையில், எக்ஸ்போசாட் செயற்கைக்கோளின் புதிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட்டில் இருந்து எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிரிந்து செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து, பூமியின் தாழ் வட்டப்பாதையில் 
செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கேமராக்கள் இந்த காட்சிகளை வீடியோ எடுத்துள்ளது.







 
ராக்கெட் குறித்து பேசிய  முன்னாள் இஸ்ரோ தலைவர் ஜி மாதவன், “இந்த ராக்கெட் அமைப்பு உலகளாவிய சூழ்நிலையில் மிகவும் நம்பகமான, குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றி விகிதம் 95% க்கும் அதிகமாக இருப்பதை அதன் சாதனைப் பதிவு காட்டுகிறது. வெளியீட்டு அமைப்புகளைப் பொருத்தவரை உலகளாவிய தரத்தை விட சிறந்த தரத்தில் வடிவமைக்கப்பட்டது" என்றார்.            


இதையும் படிக்க: Atrocities On Dalits: காவல்துறை இப்படி செய்யலாமா? நடுரோட்டில் பட்டியலின பெண்ணுக்கு அடி உதை! பகீர் வீடியோ!