Dec 2023 GST Collection: கடந்த ஏப்ரம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில், 14 லட்சத்து 97 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியாக வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல்:


டிசம்பர் 2023 இல் மொத்த ஜிஎஸ்டி வரியாக ஒரு லட்சத்து 64 ஆய்ரத்து 882 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2023ம் ஆண்டில் தொடர்ந்து 7வது முறையாக ஜிஎஸ்டி வசூலானாது ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்த தொகையானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வசூலானதை காட்டிலும் 10.3 சதவிகிதம் அதிகமாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ஆக 30 ஆயிரத்து 443 கோடி ரூபாயாகவும், மாநில ஜிஎஸ்டி ஆக 37 ஆயிரத்து 935 கோடி ரூபாயாகவும்,  ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆக 84 ஆயிரத்து 255 கோடி ரூபாயாகவும் (ரூ. 41,534 கோடி வசூல் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உட்பட) செஸ் வரியாக 12 ஆயிரத்து 249 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் சேகரிக்கப்பட்ட ரூ. 1,079 கோடி உட்பட) உள்ளது.


ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து மத்திய அரசின் பங்கிற்கு 40 ஆயிரத்து 57 கோடியும் ரூபாயும், மாநில அரசுகளுக்கான பங்காக 33 ஆயிரத்து 652 கோடி ரூபாயாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கமான தீர்வுக்குப் பிறகு டிசம்பர் 2023 இல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் முறையே 70,501 கோடி, ரூ.71,587 கோடியாக உள்ளது.








ரூ.14.97 லட்சம் கோடி வசூல்:




கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூலானது, முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தைவிட 12 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன்படி 9 மாதங்களில் ரூ.14 லட்சத்து 97 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரியாக வசூலாகியுள்ளது. ஏப்ரல்-டிசம்பர் 2022 காலகட்டத்தில் ரூ. 13 லட்சத்து 40 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது.