சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
தொடரும் அவலம்:
இதைத்தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது, நடுரோட்டில் பட்டியலின பெண்ணை போலீசார் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது.
பீகார் மாநிலம் சூரசந்த் என்ற பகுதியில் இரண்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இவர்களுக்கு இடையே வாக்குவாதம் நீடித்து பெரும் சண்டையாக வெடித்திருப்பதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பட்டியலின பெண்ணை தடியால் கடுமையாக தாக்கி உள்ளார். அந்த பெண் அடி தாங்க முடியாமல் தள்ளி போக முயன்றார். அப்போதும் கூட, தொடர்ந்து பட்டியலின பெண்ணை கடுமையாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
வீடியோ வைரல்:
அந்த வீடியோவில், சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணை, போலீஸ் அதிகாரி ஒருவர் ஓடி வந்து தடியால் அடித்திருக்கிறார். அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தப்படி நின்றுக் கொண்டிருந்தனர். அந்த போலீஸ் அதிகாரி தொடர்ந்து தாக்கி இருக்கிறார். அந்த பெண் அடி தாங்க முடியாமல் விலகச் செல்ல முயன்றார். ஆனால், போலீஸ் அதிகாரி ஓடிச் சென்று ஈவு இரக்கமின்றி நடுரோட்டில் அடித்துள்ளது போன்று வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். போலீஸ் அதிகாரியே கொடூரமாக நடந்துக் கொண்டது கண்டிக்கத்தக்கது என்று பலரும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சூரசந்த் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ராஜ் கிஷோர் சிங் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது” என்றனர். சாலையில் நின்றுக் கொண்டிருந்த பட்டியலின பெண்ணை, போலீசார் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க