கடந்த 2021ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்கத்தை தனக்கு தானே குத்தகை விட்டதாக அவர் மீது பாஜக புகார் அளித்தது. இதன் காரணமாக, சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.


சோரனை சுத்துப்போடும் அமலாக்கத்துறை:


நிலக்கரி சுரங்கத்தை குத்தகை விட்டதில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை இயக்குநரகம் சோரனுக்கு சம்மன் அனுப்பியது. 7 முறை சம்மன் அனுப்பப்பட்ட பிறகும், ஜார்க்கண்ட் முதலமைச்சர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.


அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிராக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பணிய வைக்கும் நோக்கில் மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.


நிலக்கரி சுரங்க வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படாலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விரைவில் விலக உள்ளதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.


புயலை கிளப்பிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே:


ஹேமந்த் சோரன், முதலமைச்சர் பதவியை தனது மனைவி கல்பானாவுக்கு அளிக்க உள்ளதாகவும் நிஷிகாந்த் துபே கூறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களை கூறி, ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டப்பேரவை உறுப்பினர் சர்பராஸ் அகமது, தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் தொகுதியில் தனது மனைவி கல்பனாவை போட்டியிட வைக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து விரிவாக பேசிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, "சோரன் குடும்பத்திற்கு இந்த புத்தாண்டு வலியை தரக்கூடும். ஜார்க்கண்ட் மாநிலத்தின் காண்டே எம்எல்ஏ சர்பராஸ் அகமது, சட்டசபையில் இருந்து ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்கப்பட்டது. ஹேமந்த் சோரனும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார். மேலும் அவரது மனைவி கல்பனா சோரன், அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 


ஜார்க்கண்ட் ஆளுநர் இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற வேண்டும். 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி, சட்டப்பேரவை பதவிக்காலம் தொடங்கியது. டிசம்பர் 31ஆம் தேதி, சர்ஃபராஸ் அகமது ராஜினாமா செய்தார். ஒரு வருடத்திற்குள் தேர்தலை நடத்த முடியாது" என்றார்.


எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது ஏன் என விளக்கம் அளித்த சர்பராஸ் அகமது, "மன கசப்பு காரணமாக ராஜினாமா செய்யவில்லை. கட்சி, கூட்டணி மற்றும் எனது தலைவரான முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரை வலுப்படுத்த பதவியை ராஜினாமா செய்தேன்" என்றார்.