தென்னாப்ரிக்கா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அமைச்சரின் வரவேற்பை ஏற்று, விமானத்தில் இருந்து இறங்க மறுத்துவிட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்ரிக்கா பயணம்:
தென்னாப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் கடந்த 22ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற, பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது, பிரேசில், சீனா, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பல்வேறு விவகாரங்களில் சேர்ந்து பணியாற்றுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. இறுதியில், பிரிக்ஸ் அமைப்பில் சவுதி அரேபியா உள்ளிட்ட 6 நாடுகளை புதியதாக இணைக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறங்க மறுத்த மோடி?
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோகன்ஸ்பெர்க் நகருக்கு சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி சென்றடைந்தார். அப்போது தான் முறையான மரியாதை கிடைக்கவில்லை என கூறி மோடி விமானத்தில் இருந்து இறங்கவில்லை என அந்நாட்டு நாளேடு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி “ஜோகன்ஸ்பெர்க் சென்றடைந்த பிரதமர் மோடியை வரவேற்க தென்னாப்ரிக்க அமைச்சர் ஒருவர் வருகை தந்துள்ளார். ஆனால், தனக்கு முன்பாக வந்த சீன அதிபரை தென்னாப்ரிக்க அதிபரே நேரில் வந்து வரவேற்றார். ஆனால், என்னை வரவேற்க ஒரு அமைச்சர் மட்டுமே வருகை தந்துள்ளார். எனவே நான் விமானத்தில் இருந்து இறங்க மாட்டேன்” என பிரதமர் மோடி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, தென்னாப்ரிக்காவின் துணை அதிபர் விமான நிலையத்திற்கு வந்த பிறகு அவரது வரவேற்பை ஏற்று, மோடி விமானத்தில் இருந்து இறங்கியதாகவும் அந்த நாளேடு செய்தி வெளியிட்டு இருந்தது.
சைபர் அட்டாக்:
விமானத்தில் இறங்க மோடி மறுத்ததாக வெளியான செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. அதேநேரம், குறிப்பிட்ட நாளேட்டின் இணைய தளத்தை இந்தியாவில் பொதுமக்களால் அணுக முடியாத சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாகவும் செய்தி வெளியிட்டுள்ள அந்த நாளேடு நிறுவனம், இந்தியாவில் இருந்து தங்கள் செய்தி இணையதளத்தின் மீது சைபர் அட்டாக் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தொடர்பான தங்களது செய்தியை இந்தியர்கள் யாரும் படிக்கவிடாமல் தடுக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
தென்னாப்ரிக்கா அரசு விளக்கம்:
சைபர் அட்டாக் தொடர்பான குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மோடி விவகாரம் தொடர்பாக தென்னாப்ரிக்க அரசு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி, மோடியை வரவேற்க துணை அதிபர் செல்வது என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான். கடைசி நேரத்தில் அவசரகதியில் ஒன்றும் அவர் அனுப்பப்படவில்லை. இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா பிரதிநிதிகள் இடையே எந்த குழப்பமும் இல்லை. இருநாட்டு உறவும் சுமூகமாக உள்ளது” என தென்னாப்ரிக்கா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.