ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் தொடங்கி மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி வரை, 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தந்திருக்க வேண்டும். 


காவிரி பிரச்னை:


ஆனால், பருவமழை தாமதம் காரணமாக 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிலுவையில் உள்ள 37.9 டிஎம்சி நீரை திறந்துவிடக் கோரிய‌ தமிழ்நாட்டின் கோரிக்கையை கர்நாடகா ஏற்க மறுத்ததால் தமிழ்நாடு நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். 


இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டார். ஆனால், கர்நாடகாவில் கடும் வறட்சியை சந்தித்து வருவதாகவும்,  தண்ணீர் திறப்பு குறித்து மத்திய அரசு அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்திருந்தார்.


உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:


இச்சூழலில், அடுத்த 15 நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளது.


இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து கட்சி கூட்டத்தின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் உண்மை நிலவரத்தை கர்நாடகத்தை சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியிடம் விளக்க உள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.


டெல்லிக்கு செல்லும் அனைத்து கட்சி குழு:


அனைத்து கட்சி கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "எதிர்க்கட்சிகளான பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இந்த விவகாரத்தில் அரசுடன் ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் உண்மை நிலவரத்தை பிரதமர் மோடியிடம் விளக்குவோம்.


கிருஷ்ணா தீர்ப்பாய தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் மகதாயி குடிநீர் திட்டத்திற்கு வனத்துறை அனுமதி பெறவும் பிரதமரிடம் வலியுறுத்துவோம். மேகதாது, மகதாயி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம்


மாநிலத்தின் நீர், நிலம், மொழி ஆகியவற்றை பாதுகாப்பதில் அரசியல் இருக்கக்கூடாது என்பதில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து உள்ளது. இப்போதைக்கு கர்நாடகாவுக்கு இரண்டு முக்கிய விஷயங்கள்தான் இருக்கிறது. வறட்சியான காலத்தில் காவிரி நீரை பங்கீடுவதில் தனியான பார்மூலா வகுப்பது. மேகதாது அணைக்கு அனுமதி பெறுவது" என்றார்.