தேசிய பணியாளர் தேர்வு ஆணையத்தின் பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் கணக்கு பொய்யானது என்று பிஐபி தனது ஃபேக்ட் செக்கில் தெரிவித்துள்ளது. மேலும் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இல்லை என்றும் பதிலளித்துள்ளது.
ட்விட்டரில் பணியாளர் தேர்வு ஆணையம்
ட்விட்டர் சமூக வலை தளத்தில் அதிகாரப்பூர்வ பணியாளர் தேர்வாணையத்தின் கணக்கு என்று கூறி '@ssc_official__' என்ற ஐடியில் ஒரு கணக்கு இயங்கி வருகிறது. தொடர்ந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் பல டீவீட்கள் அதில் பதிவிடப்படுகின்றன. தொடர்ந்து பலர் இதனை பின் தொடரும் பட்சத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு இதன் உண்மைத்தன்மை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ பக்கம் இல்லை
பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவிடப்படும் பல அறிவிப்புகள் இதில் டீவீட்டாக பதிவிடப்பட்டு வருகிறது. இணையத்தில் வெளியாகும் பிடிஎஃப்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டும் சில பதிவுகள் காணப்படுகின்றன. ஆனால் இந்த பக்கம் உண்மையான அதிகாரப்பூர்வ பக்கம் இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
பணியாளர் தேர்வாணையத்திற்கு ட்விட்டர் கணக்கு இல்லை
பணியாளர் தேர்வு ஆணையத்திற்கென்று தனியாக ட்விட்டர் பக்கம் எதுவும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த அக்கவுண்ட் யாரால் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த பக்கத்திற்கு 35 ஆயிரம் ஃபாலோயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்களுக்கு இணையதளத்தை பயன்படுத்தவும்
இதில் தவறான தகவல்கள் எதுவும் இல்லை, ஆனால் அதிகாரப்பூர்வ பக்கம் என்று ஒரு அரசு ஆணையத்தின் பக்கத்தை பயன்படுத்துவது குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிஐபி நடத்திய ஃபேக்ட் செக்கின்படி, எஸ்எஸ்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் என்று கூறப்பட்ட கணக்கு போலியானது. "எஸ்எஸ்சிக்கு ட்விட்டர் கணக்கு இல்லை" என்று இந்த பதிவில் பிஐபி கூறியது. அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு ssc.nic.in என்ற SSCயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் என மக்களை அது வலியுறுத்தியுள்ளது.