ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம், அதானி விவகாரம் ஆகியவை நாடாளுமன்றத்தில் தொடர் பிரச்னைக்கு வழிவகுத்து வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் கூட நடைபெறாமல் இருப்பது அனைவரையும் கவலை கொள்ள செய்துள்ளது.   


முன்னதாக, மக்களவையும் மாநிலங்களவையும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கூடிய நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினை தொடர் அமளியை ஏற்படுத்தியது. எனவே, நேற்று முன்தினமும் நேற்றும் எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக நாடாளுமன்ற முடங்கிபோனது.


முடங்கி போன நாடாளுமன்றம்:


இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு இன்று எதிர்க்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து வந்தது அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையும் மாநிலங்களவையும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்பியாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது.


வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி முடங்கியுள்ளது. லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரத்தை முன்வைத்து ஆளுங்கட்சியினரும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சியினரும் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.


முன்னதாக, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்:


இந்த கூட்டத்தில், திமுக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கேரளா காங்கிரஸ், திரிணாமுல், ஆர்எஸ்பி, ஆம் ஆத்மி, தேசிய மாநாடு, சிவ சேனா (உத்தவ்) உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர்.


காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த மம்தாவின் திரிணாமுல் கட்சி எம்பிக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பாஜகவை கடுமையாக சாடியிருந்தார் மம்தா.


இதுகுறித்து பேசிய கார்கே, "இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதனால்தான், நேற்று அனைவருக்கும் நன்றி தெரிவித்தேன். இன்றும் நன்றி தெரிவித்தேன். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் முன்வருபவர்களை வரவேற்கிறோம். எங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.


மேலும் படிக்க: தாம்பரம் அருகே கோயில் குளத்தில் மூழ்கி 5 இளைஞர்கள் உயிரிழப்பு.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு..!