ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் நடந்து வரும் போரால் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 24-ந் தேதி ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




இந்த நிலையில், உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை இந்தியா கொண்டுவர மத்திய மற்றும் கர்நாடக மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில், உயிரிழந்த மாணவர் நவீனின் உடல் சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு இந்தியா கொண்டு வரப்பட்டது. இந்தியா கொண்டு வரப்பட்ட மாணவர் நவீனின் உடல், இன்று காலை பெங்களூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.






 


மேலும், நவீனின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, நவீனை உயிருடன் மீட்க முடியவில்லையே என்ற வேதனையும், வருத்தமும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.


முதல்வரின் இறுதி அஞ்சலிக்கு பிறகு கர்நாடகாவில் உள்ள ஹாவேரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. ஹாவேரி மாவட்டத்தில் உள்ள மாணவர் நவீனின் கிராமமான சாலாகேரியில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மாணவர் நவீனின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.




உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைகழகத்தில் மாணவர் நவீன் நான்காம் ஆண்டு படித்து வந்தார். போர் தீவிரமடைந்த தருணத்தில் தனது ஜூனியர் மாணவர்களுக்கு உணவு வாங்குவதற்காக வெளியில் சென்றவர் ரஷ்ய படை நடத்திய தாக்குதலினால் பரிதாபமாக உயிரிழந்தார்.


உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரையும் ஆபரேஷன் கங்கா என்ற திட்டம் மூலமாக மத்திய அரசு மீட்டு வருகிறது. இதுவரை 19 ஆயிரம் இந்திய மாணவர்கள் ஆபரேஷன் கங்கா திட்டம் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 572 நபர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். மாணவர் நவீனின் உடல் உக்ரைனில் இருந்து துபாய் வழியாக பெங்களூர் கொண்டு வரப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண