கோவா திரைப்பட விழாவில் ‘காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், இந்த திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் இது வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 


இந்த ஆண்டு  தொடக்கத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய படம் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இப்படம், காஷ்மீரில் இருந்து 1990ஆம் ஆண்டு பண்டிதர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் இன்றளவும் கடும் விமர்சனங்களைப் பெற்றது.


இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மிகைப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றும், இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தன.


அதே சமயம் இப்படம் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜகவினர் பலரது பாராட்டுகளைப் பெற்றது. மேலும், பாஜக ஆளும் சில மாநிலங்களில் இப்படத்துக்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு வெளியான பாலிவுட் படங்கள் பெரும்பாலும் படுதோல்வியை சந்தித்த நிலையில், சர்ச்சைகளைத் தாண்டி இப்படம் நாடு முழுவதும் 340 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்ததாக கூறப்படுகிறது. 


இந்நிலையில், கோவா திரைப்பட விழாவில் ‘காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், இந்த திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் இது வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 


சுமார் 9 நாட்கள் நடைபெற்ற கோவா திரைப்பட விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 படங்கள் திரையிடப்பட்டது. இந்த விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் திரையிடப்பட்டு, விருதுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 


இந்த சூழலில், திரைப்பட விழாவின் நேற்று கடைசி நாளான்று இந்த திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் பேசினார். அப்போது பேசிய அவர், ”தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம். இது திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை. இந்த படத்தை பார்த்த நாங்கள் அனைவரும் கலக்கமடைந்தோம், அதிர்ச்சியடைந்தோம். இந்த விழாவில் நாங்கள் உணர்ந்த உணர்வு கலைக்கும், வாழ்க்கைக்கும் இன்றியமையாத ஒரு விமர்சன விவாதத்தையும் உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியை தெரிவித்து கொள்கிறோம்.” என்றார்.


காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் தனது அடுத்த படத்திற்கு ‘தி வேக்சின் வார்’ எனப் பெயர் வைத்துள்ளார். 



தொடர்ந்து, "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" வெறுப்புணர்வை தூண்டும் மோசமான படம்' என்ற கோவா திரைப்பட விழா தேர்வுக்குழு தெரிவித்த கருத்துக்கு, அப்படத்தின் நடிகர் அனுபம் கெர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “நாடவ் இப்படி சொல்லியிருப்பது வெட்கக்கேடானது. சித்தி விநாயகர், அவருக்கு அறிவை கொடுக்கட்டும். பொய்யின் உயரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் சரி, உண்மையுடன் ஒப்பிடுகையில் அது எப்போதும் சிறியதே” என்று தெரிவித்துள்ளார். 


இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் கோவா திரைப்பட தேர்வுக்குழு தலைவர் நாவட் கருத்துக்கு தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார். அதில், ”இஸ்ரேலிய திரைக்கதை எழுத்தாளரும் நடுவர் தலைவருமான நடவ் லாபிட், இஸ்ரேலில் நீங்கள் விரும்பாதவற்றைப் பற்றி உங்கள் விமர்சனத்தை வெளிப்படுத்த சுதந்திரத்தைப் பயன்படுத்த தயங்க வேண்டாம், ஆனால் மற்ற நாடுகளில் உங்கள் விரக்தியைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தெரிவித்த கருத்து உங்களுடைய கருத்துகளே தவிர, அதற்கும் இஸ்ரேலுக்கு எந்த சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார்.