ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) சமீபத்திய தரவுகளின்படி, சீனாவை விட இந்தியா, 2.9 மில்லியன் மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடாக இருப்பதாகவும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவைக் கடந்த இந்திய மக்கள்தொகை


UNFPA இன் '8 பில்லியன் உயிர்கள், எல்லையற்ற சாத்தியங்கள்: உரிமைகள் மற்றும் தேர்வுகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட 'உலக மக்கள்தொகை அறிக்கையின் நிலை, 2023' -இன்படி, இந்தியாவின் மக்கள்தொகை 1,428.6 மில்லியனாகவும், சீனாவின் மக்கள் தொகை 1,425.7 மில்லியனாகவும் உள்ளது, என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவை விட இந்தியா 2.9 மில்லியன் மக்கள் அதிகம் கொண்ட நாடாகியுள்ளது. 1950-ஆம் ஆண்டு ஐ.நா மக்கள்தொகை தரவுகளை சேகரித்து வெளியிடத் தொடங்கிய பின்னர் இந்தியா முதன் முதலாக சீனாவை முந்தியுள்ளது. 340 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளதாக தரவுகள் காட்டுகிறது. இந்த தரவு பிப்ரவரி 2023 நிலவரப்படி எடுக்கப்பட்ட தகவல்களை பிரதிபலிப்பதாக அறிக்கை கூறியது.



இன்னும் உறுதி செய்யப்படவில்லை


ஐநாவின் முந்தைய தரவுகளைப் பயன்படுத்தி மக்கள்தொகை வல்லுநர்கள் இந்தியா இந்த மாதம் சீனாவைக் கடந்து செல்லும் என்று கணித்துள்ளனர். ஆனால் உலகளாவிய அமைப்பின் சமீபத்திய அறிக்கை மாற்றம் எப்போது நடைபெறும் என்பதற்கான தேதியைக் குறிப்பிடவில்லை. இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வெளிவரும் தரவு பற்றிய "நிச்சயமற்ற தன்மை" காரணமாக, இவை இன்னும் உறுதியாக கூறப்படவில்லை. குறிப்பாக 2011-இல்தான் இந்தியாவின் கடைசி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளது, தொற்றுநோய் காரணமாக 2021-இல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதமாகிவிட்டதால், தேதியைக் குறிப்பிட முடியாது என்று ஐநா மக்கள்தொகை அதிகாரிகள் கூறியுள்ளனர். .


தொடர்புடைய செய்திகள்: ”இன்று பில்கிஸ்; நாளை யாரா வேணா இருக்கலாம்; எந்த விதியை கடைபிடிச்சீங்க?” - மத்திய அரசை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம்..!


சீனாவில் வரலாற்றுத் திருப்பம்


8.045 பில்லியன் உலக மக்கள்தொகையில் இந்தியாவும் சீனாவும் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கும் என்றாலும், இரு ஆசிய நாடுகளின் மக்கள்தொகை வளர்ச்சியை ஒப்பிடுகையில், சீனா சற்று பின்தங்கிய நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு, சீனாவின் மக்கள்தொகை அறுபது ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சியடைந்தது ஒரு வரலாற்றுத் திருப்பமாக அமைந்தது. இது அதன் குடிமக்கள் எண்ணிக்கையில் நீண்ட கால வீழ்ச்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் பொருளாதார உலகில் இது பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.



இந்தியாவில் வளர்ச்சி விகிதம்


அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் வருடாந்திர மக்கள்தொகை வளர்ச்சி 2011 முதல் சராசரியாக 1.2% ஆக உள்ளது, இது முந்தைய 10 ஆண்டுகளில் 1.7% ஆக இருந்தது. UNFPA இந்தியாவின் பிரதிநிதியான ஆண்ட்ரியா வோஜ்னர் ஒரு அறிக்கையில், “மக்கள்தொகை கவலைகள் பொது மக்களில் பெரும் பகுதியினருக்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மக்கள்தொகை எண்கள் கவலையைத் தூண்டவோ அல்லது எச்சரிக்கையை உருவாக்கவோ கூடாது. மாறாக, தனிப்பட்ட உரிமைகள் மற்றும் தேர்வுகள் நிலைநிறுத்தப்பட்டால், அவை முன்னேற்றம், வளர்ச்சியின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.