மகாராஷ்டிராவில் தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. முன்னதாக, காங்கிரஸ் - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி அங்கு நடந்து வந்தது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார்.


மகாராஷ்டிரா அரசியல் சூழல்:


ஆனால், சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் துணையோடு கட்சி மேலிடத்திற்கு எதிராக போர்கொடி தூக்கினார். பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.


பின்னர், பாஜகவின் உதவியோடு மகாராஷ்டிரா முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ்-க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை உண்மையான சிவசேனாவாக இந்தியல் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.


இச்சூழலில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால், மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட போவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.


வதந்திகளுக்கு காரணமாக மாறிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு:


ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக தீர்ப்பு வெளியாகும் பட்சத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸை உடைக்க திட்டம் தீட்டப்படுவதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரை, தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரான அஜித் பவார், சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார்.


பாஜகவுடன் கைகோர்ப்பதற்கு ஆதரவு கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 40 சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் அஜித் பவார் கையெழுத்து வாங்கியதாகத தகவல் வெளியானது. இது அரசியலில் புயலை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அஜித் பவார் விளக்கம் அளித்துள்ளார்.


அனைத்து விதமான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து பேசிய அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் ஒரு குடும்பம் என்றும் தலைவர் சரத்பவார் தலைமையில் தொடர்ந்து செயல்படும் என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "என்னை பற்றியும் எனது கட்சியின் சக எம்எல்ஏக்கள் பற்றியும் ஆதாரமற்ற ஊகம் பரப்பப்படுகிறது. பாஜகவுக்கு செல்ல போவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. எனவே, இது அனைத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது" என்றார்.