சக மல்யுத்த வீரரை கொடூரமாக தாக்கி உயிரிழக்கச் செய்த வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர். இது குறித்து தெரிவித்த போலீசார், சக மல்யுத்த வீரர்களை மிரட்டுவதற்காக தாங்கள் தாக்குதல் நடத்தியதை சுஷில்குமாரின் நண்பர்கள் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர் என தெரிவித்தனர். 




இந்நிலையில் அந்த வீடியோ  இணையத்தில் கசிந்துள்ளது. அதில், மல்யுத்த வீரர் சுஷிலும் அவரது நண்பர்கள் 3பேரும் சாகரை சுற்றி நிற்கின்றனர். தாக்குதலால் நிலைகுலைந்த சாகர் தரையில் விழுந்து கிடக்கிறார். இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், மல்யுத்த வட்டார குரூப்பில் தங்கள் அதிகாரத்தைக் காட்டுவதற்காக தாக்குதலை வீடியோவாக பதிவிட்டுள்ளன. அதனை மல்யுத்த வட்டாரத்தில் பரப்பியுள்ளனர் என்றனர். இந்த தாக்குதல் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பரவி வருகின்றன.




காசு கொடுக்கிறியா? இல்லை கோர்ட்டுக்கு வரியா? - வட இந்தியர்களின் ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி




முன்னதாக, கடந்த மே 5-ம் தேதி மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் மற்றொரு மல்யுத்த வீரரான 23 வயதுடைய சாகர் ராணா இருவருக்கும் டெல்லியிலுள்ள சத்ராஸல் விளையாட்டு அரங்கின் கார் பார்க்கிங்கில் கை கலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் சாகர் ராணாவை சுஷில் குமாரும் மற்றும் அவரின் நண்பர்கள் கடுமையாக தாக்கினர்.




இதில் படுகாயமடைந்த சாகர் ரானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சாகர் ரானாவின் நண்பர்கள் சோனு, அமித் குமார் காயங்களுடன் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து சுஷில் குமார் மீது டெல்லி காவல்துறையினர் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.இதையறிந்த சுஷில் குமார் தலைமறைவானார், அதனால் அவரை தேடும் பணி தீவிரமடைந்தது. 


ஹரித்துவார் சென்றுவிட்டார், பின் ரிஷிகேஷில் இருக்கிறார் என்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாயின. ஒரு கட்டத்தில் சுஷில் குமார் நாட்டைவிட்டு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. மேலும் சுஷில் குமாரைப் பற்றிய தகவல் தெரிவித்தால் ரூபாய் 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. டெல்லி நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத உத்தரவை சுஷில் குமார் மற்றும் அவருடன் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 6 நபர்களுக்கு பிறப்பித்தது.




இந்நிலையில் கடந்த வாரம் சுஷில்குமார் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே மே 18ல் சுஷில்குமார் சார்பில் முன் ஜாமின் கோரப்பட்டிருந்தது.  ஆனால் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி எனக் குறிப்பிட்ட நீதிமன்றம் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி  செய்தது.


2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் சுஷில்குமார் என்பது குறிப்பிடத்தக்கது




ஆசிய குத்துசண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மேரி கோம், சாக்ஷி!