இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்தும் வரும் சூழலில் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துத்தான் வருகின்றன. இந்த வகையான மோசடிகளில் பலர் சிக்கி தங்களுடைய பணம், தகவல் உள்ளிட்டவற்றை இழந்து தவித்து வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் புகார் தொடர்பாக விசாரிக்க சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் இருக்கின்றனர். இருப்பினும் இந்த சைபர் கிரைம் புகார்கள் தொடர்ந்து அதிகரித்துதான் வருகின்றன. அத்துடன் ஒவ்வொரு புகாரும் வரும் போது அவை எவ்வளவு நூதனமாக இருக்கிறது என்பது நமக்கு தெரிய வருகிறது. 






அந்தவகையில் தற்போது பெண் ஒருவரை வட இந்தியர்கள் நூதன முறையில் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி பெண் ஒருவர் இ-புத்தகம் டைப் செய்யும் வேலைக்கு குயிக்கர் வேலை தேடம் தளம் மூலம் விண்ணப்பிக்க முயன்றுள்ளார். இதற்காக தன்னுடைய அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளார். எனினும் இறுதியில் அவருக்கு ஒரு பக்கத்திற்கு 2 ரூபாய் என்ற தொகை பிடிக்காத காரணத்தால் பாதியிலேயே அவர் அதை நிறுத்தியுள்ளார். 






இதனைத் தொடர்ந்து அவருக்கு குஜராத்திலிருந்து ஒருவர் கைப்பேசியில் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை ஏற்று கொள்ளுங்கள் சம்பள விவரம் தொடர்பாக பின்னர் பேசி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அவரின் பேச்சை கேட்ட அப்பெண் இந்த வேலை ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்பு அப்பெண்ணிற்கு மின்னஞ்சல் மூலம் அந்த கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. அதில் நீங்கள் ஒப்பந்தத்தை மீறினால் புகார் அளிக்கப்படும். அதை தவிர்க்க உடனடியாக நீங்கள் 15 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அப்படி செய்யவில்லை என்றால் குஜராத் நீதிமன்றத்தில் வந்து 78 ஆயிரம் வரை அபராதம் கட்ட வேண்டும் என்று பயம் காட்டியுள்ளதாக தெரிகிறது. 






அதன்பின்னர் மீண்டும் வழக்கறிஞர் எண் என்று ஒரு நம்பரை கொடுத்துள்ளனர். அந்த நம்பருக்கு அப்பெண் தொடர்பு கொண்டுள்ளார். அதை எடுக்காமல் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளனர். அதில் தற்போது வழக்கு காவல்துறைக்கு சென்றுள்ளது. எனவே காவலரின் போன்பே கணக்குக்கு 8 ஆயிரம் ரூபாய் அனுப்பு வேண்டும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பெண் குஜராத் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான புகார் நிறையே காவல்துறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 






ஆகவே இந்த மாதிரியான ஆன்லைன் மோசடிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தனக்கு தெரிந்த ஒருவரின் அனுபவத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ட்விட்டர்வாசி.