நாட்டின் முக்கியமான உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) உள்ளது. ஆனால், அங்கு சாதிய பாகுபாடு இருப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, சாதிய பாகுபாடு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக எழும் பிரச்னை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


அசைவ உணவை சாப்பிடும் மாணவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகின்றனரா?


அதேபோல, அசைவ உணவை சாப்பிடும் மாணவர்கள் ஐஐடியில்  ஒதுக்கிவைப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஐஐடி பாம்பேயில் இதேபோன்ற சர்ச்சை வெடித்துள்ளது. கல்லூரி வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள விடுதியின் உணவகத்தில் சைவ உணவை சாப்பிடும் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மேஜையில் மாணவர்கள் சிலர் அசைவ உணவு சாப்பிட்டது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது.


அசைவ உணவை சாப்பிடும் மாணவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர் எனக் கூறி போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ஐஐடி நிர்வாகம், 10,000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. 


ஒத்துழையாமை போராட்டத்தை மேற்கொண்ட மாணவர்களுக்கு அபராதம்:


ஐஐடி பாம்பேயில் இயங்கி வரும் அம்பேத்கர் பெரியார் பூலே வாசக வட்டம் இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "கல்லூரியின் உணவுப் பிரிவினைக் கொள்கைக்கு எதிராக அமைதியான முறையில் ஒத்துழையாமை போராட்டத்தை மேற்கொண்ட மாணவர்களுக்கு ஐஐடி பாம்பே நிர்வாகம் 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, நவீன காலத்தில் தீண்டாமையை நிலைநாட்டும் சாதி பஞ்சாயத்து போன்றது" என குறிப்பிட்டுள்ளது.


மாணவர் அமைப்பின் குற்றச்சாட்டு குறித்து ஐஐடி பாம்பே நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் முறையான பதிலை அளிக்கவில்லை. அசைவ உணவை உண்ணும் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஐஐடி பாம்பே உணவு விடுதி அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 


சைவ உணவு உண்பவர்களுக்காக தனி டேபிள்கள்:


அதில், "மூன்று விடுதிகளுக்கான பொதுவான கேன்டீனில் சைவ உணவு உண்பவர்களுக்காக ஆறு டேபிள்கள் ஒதுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டது. இதற்கு மாணவர்கள் இணங்குவது மிக முக்கியம். விதிகளை மீறுபவராக உணவு விடுதி யாரையேனும் கண்டறிந்தால், அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும்.


இத்தகைய மீறல்கள் ஒழுங்கு நடவடிக்கைகளில் பரிசீலிக்கப்படும். ஏனெனில், அவை உணவு விடுதியில் நாம் பராமரிக்க விரும்பும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


சமீபத்தில், ஐஐடி பாம்பே கல்லூரியில் தர்ஷன் சோலங்கி என்ற மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் குழுவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இதையும் படிக்க: IIT Student Suicide : ஐஐடி மாணவர் தற்கொலை...சாதிய பாகுபாடு குறித்து குற்றப்பத்திரிகையில் வெளியான உண்மை..!