Maharastra Death: மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு மருத்துமனைகளில் 31 பேர் உயிரிழந்த விவகாரத்தை தாமாக முன்வந்து இன்று விசாரித்தது மும்பை உயர்நீதிமன்றம்
மகாராஷ்டிராவை உலுக்கிய மரணங்கள்:
நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக திகழ்வது மகாராஷ்ட்ரா ஆகும். இந்த மாநிலத்தில் கடந்த 72 மணி நேரத்தில் 31 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இது ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது, நான்டெட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 12 குழந்தைகளில் 6 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள். அவர்களில் 6 பேர் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும், பிறர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனை அடுத்து, அவுரங்காபாத் மாவட்டத்தில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 8 பேரில் 2 பச்சிளம் குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் இதோடு முடியவில்லை. இந்த சம்பவத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் மகாராஷ்டிரா அரசை கடுமையாக சாடினர்.
மகாராஷ்டிரா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு:
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி ஆரிப் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டது. மேலும், இந்த இரண்டு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் விவரம், படுக்கையறைகள், ஊழியர்கள், மருத்துகள் உள்ளிட்ட விவகரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ”நோயாளிகளின் இறப்புக்கு பற்றாக்குறை படுக்கைகள், மருத்துவர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை என்று கூறுகின்றன. இப்படி, மருந்துகள், ஊழியர்கள் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடந்திருந்தால், அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது" என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்தது. இதனை அடுத்து, இந்த மரணம் தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
என்ன காரணம்?
மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகளில் பொதிய அளவு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருந்துகள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சில சமயங்களில் நிறுவனத்தின் வரவு செலவுத் திட்டத்தை விட அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், பல மருத்துவமனை ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறையும் இருந்தது என அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹாஃப்கைன் என்ற நிறுவனத்திடமிருந்து மருந்துகளை மருத்துவமனை வாங்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் மருத்துவமனை டீன் கூறியுள்ளார். இதனால், நோயாளிகள் உள்ளூர் கடைகளில் இருந்து மருந்துகளை வாங்கிய பின்னரே, அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது என்று தெரிகிறது.