Atrocities On Dalits: மத்திய பிரசேதத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த நபரின் முகத்தில் மலம் பூசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடரும் கொடூரங்கள்:
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது.சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது, பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக, ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பழங்குடி இளைஞர், சிறுமி ஒருவரை காதலித்த காரணத்தால் ஆறு இளைஞர்கள் சேர்ந்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது மத்திய பிரதேசத்தில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
முகத்தில் மலம் பூசிய கொடூரம்:
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிகௌரா பகுதியில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்கு தஷ்ரத் அஹிர்வார் என்பவர் கட்டுமானம் தொடர்பாக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு பம்ப் ஒன்றில் ராம்கிருபால் படேல் என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, தலித் வகுப்பைச் சேர்ந்த தஷ்ரத் அஹிர்வார் அவரை தவறுதலாக தொட்டு இருக்கிறார். இதில் கட்டுமான பணியின்போது அவர் பயன்படுத்திய கிரீஸானது ராம்கிருபால் படேலின் உடம்பில் பட்டுவிட்டது. இதனால் கோபமடைந்த ராம்கிருபால் தான் குளிக்க பயன்படுத்திய குவளையில் அருகில் கிடந்த மனித மலத்தை எடுத்து வந்து தஷ்ரத் அஹிர்வாரின் உடல், தலை மற்றும் முகத்தில் பூசி இருக்கிறார். மேலும், சாதி பெயரைச் சொல்லியும் கடுமையான வார்த்தைகளில் பேசி, அவமானப்படுத்தியும் இருக்கிறார்.
கைது:
இதனால் விரக்தியில் இருந்த அஹிர்வார் இந்த சம்பவம் குறித்து பேச பஞ்சாயத்தை அணுகி கூட்டத்தை கூட்ட சொல்லி உள்ளார். ஆனால் அந்த பஞ்சாயத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை தண்டிக்காமல், தஷ்ரத் அஹிர்வாருக்கு 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தஷ்ரத் அஹிர்வார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தலித் நபரின் முகத்தில் மலத்தை பூசிய ராம்கிருபால் படேல் என்று அடையாளம் காணப்பட்டு, அவர் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் 40 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.