மணிப்பூரில் உள்ள பழங்குடியினரை காட்டுமிராண்டித்தனமாக நடத்துவதை நாடு அனுமதிக்காது என குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதியுள்ளார்.


ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய மணிப்பூர் கொடூரம்:


மணிப்பூரில் நடந்து வரும் கொடூரம் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியாகி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு மாதங்களாக மணிப்பூர் இனக்கலவரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி, கூட, இதை கடுமையாக கண்டித்துள்ளார்.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா என பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மணிப்பூர் விவகாரம், நாடாளுமன்றத்தையே தலைகீழாக திருப்பி போட்டுள்ளது. 


இந்த நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பழங்குடி மக்களுக்கு நேர்ந்து வரும் கொடூரத்தை விளக்கியுள்ள அவர், சொல்ல முடியாத அளவுக்கு பெண்கள், சித்திரவதை செய்யப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.


"அரசியலமைப்பு கோட்பாடுகள் உடைந்துவிட்டது"


"கொடுமையைக் கண்டு மௌனம் காப்பது ஒரு கொடிய குற்றமாகும். எனவே, மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து கனத்த இதயத்துடனும் ஆழ்ந்த வேதனையுடனும் உங்களுக்கு எழுத வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்புர் எரிந்து வருகிறது. மனதை உலுக்கும் வீடியோக்கள் வெளிவருகின்றன. 


வேறு எங்கும் நடந்திராத அளவுக்கு ஜனநாயக அரசு முடங்கிப் போயுள்ளது. மணிப்பூரும் இந்தியாவும் எதிர்கொள்ளும் இந்த இருண்ட நெருக்கடியான நேரத்தில், மணிப்பூர் மக்களுக்கும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த இக்கட்டான காலங்களில் ஒளியைக் காட்டக்கூடிய நம்பிக்கை, உத்வேகத்தின் கடைசி ஆதாரமாக நாங்கள் உங்களை எதிர்நோக்குகிறோம்.


ஜார்க்கண்ட் முதலமைச்சராகவும் இந்த தேசத்தின் அக்கறையுள்ள குடிமகன் என்ற முறையிலும் மணிப்பூரில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன. சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் நாசப்படுத்தப்பட்டன.


சொல்ல முடியாத சித்திரவதை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு பெண்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பல்வேறு இனக்குழுக்கள் பாதுகாப்பின்மையால் தவித்து வருகின்றனர். அதனால், இடம்பெயர்ந்துள்ளனர். நமது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட மனித வாழ்க்கை மற்றும் கண்ணியத்தின் உள்ளார்ந்த கோட்பாடுகள் முற்றிலும் உடைந்துவிட்டதாகத் தெரிகிறது.


உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மிருகத்தனத்திற்கு மக்கள் உள்ளாகும் நிலையை சமூகம் ஒருபோதும் அடையக்கூடாது" என குறிப்பிட்டுள்ளார்.