"தமிழக சகோதரர்கள் மீது எனக்கு கோபமோ வெறுப்போ இல்லை என்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன்" என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.


கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: மேகதாது அணை திட்டத்தால் கர்நாடகா, தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களும் பயனடையும் என்றும் இது தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். 


கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:"காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன். விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. " இவ்வாறு டி.கே.சிவகுமார் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். 

இந்த செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும் மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல என்றும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.