ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவர் கெலாட் முதலமைச்சராகவும் இளம் தலைவர் சச்சின் பைலட் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
ராஜஸ்தான் காங்கிரஸில் உட்கட்சி பூசல்:
தொடக்கத்தில், முதலமைச்சர் பதவியைதான் சச்சின் பைலட் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கெலாட்டுக்கு இருந்ததால், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் காரணமாக, இருவருக்கும் இடையே தொடர் அதிகார போட்டி நிலவி வந்தது.
இதற்கிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு, கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்கு சென்ற நிலையில், டெல்லி தலைமையின் தலையீட்டின் காரணமாக ஒரு மாதம் நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்தது. பின்னர், துணை முதலமைச்சர் மற்றும் மாநில தலைவர் பதவியில் இருந்து பைலட் நீக்கப்பட்டார்.
இருப்பினும் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தியின் முயற்சியில் சச்சின் பைலட் சமாதானம் செய்யப்பட்டு தற்போது கட்சியில் தொடர்ந்து வருகிறார். இருந்தபோதிலும், பைலட், கெலாட்டுக்கு இடையேயான பிரச்னை முடிந்தபாடில்லை. இந்தாண்டின் இறுதியில், ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் அரசியல் செய்ய தொடங்கினார் சச்சின் பைலட்.
பிரச்சனையை முடிவுக்கு கொண்ட வர மேலிடம் எடுத்த நடவடிக்கை:
ஆனால், உட்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் காங்கிரஸ் மேலிடம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டை அழைத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.
இரண்டு தலைவர்களும் தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்ள ஒப்பு கொண்டதாக காங்கிரஸ் தெரிவித்தது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி, சச்சினுக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.
இந்நிலையில், அசோக் கெலாட் அரசாங்கத்திடம் இருந்து தனது கோரிக்கைகளில் இருந்து சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். தேர்தலை இருவரும் ஒற்றுமையுடன் எதிர்கொள்வார்கள் என காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில், பைலட்டின் கருத்து மீண்டும் பிரச்னையை உருவாக்கியுள்ளது.
முந்தைய பாஜக அரசில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக மே மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அசோக் கெலாட் அரசுக்கு சச்சின் பைலட் அவகாசம் வழங்கியிருந்தார். அந்த அவகாசம் இன்று முடிவடைந்துள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அவர், "நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்றார்.
விரிவாக பேசிய அவர், "நான் எழுப்பிய பிரச்சனைகள், குறிப்பாக ஊழல் விவகாரம். முந்தைய பாஜக ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் மற்றும் கொள்ளை. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் கூற விரும்புகிறேன். இளைஞர்களுக்கு நீதி கிடைப்பதைப் பொறுத்த வரையில், அதில் எந்த சமரசமும் ஏற்பட வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்" என்றார்.