Manipur Violence : மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.


மணிப்பூர் கலவரம்


மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.


எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி மே 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. கலவரம் வெடித்ததில் இருந்து இதுவரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,000க்கும் மேற்ப்பட்டோர் தங்களின் ஊர்களில் இருந்து வெளியேறி ராணுவ முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


மணிப்பூர் விரைந்த அமித்ஷா


இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்மாநிலத்திற்கு கடந்த 29ஆம்  தேதி வருகை புரிந்தார். முதலில் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, முதல்வர் பிரேன்சிங் உள்ளிட்டோரை சந்தித்து கலவரம் தொடர்பாக பேசினார். இதனை அடுத்து, மாநில அமைச்சர்கள், அதிகாரிகளையும் அமித்ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், மக்களையும் சந்தித்து அறுதல் கூறினார் அமித்ஷா.


விசாரணை குழு அமைப்பு


இதனை தொடர்ந்து இன்று இம்பாலில் செய்தியாளர்களை சந்தித்தார் அமித்ஷா. அப்போது, அவர் கூறியதாவது, ”மணிப்பூரில் கடந்த ஒரு மாதம் தொடர்ந்து வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. வன்முறைகளில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.


மேலும், ”மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும். மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அமைதி குழு ஒன்று மாநில ஆளுநர் தலைமையில் அமைக்கப்படும். மணிப்பூர் தொடர்பான ஆறு வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என்றும் விசாரணை பாரபட்சம் இன்றி நடைபெறும்" என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.


வதந்திகளை நம்ப வேண்டாம்


மேலும், "கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். சட்டத்தை கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். ஆயுதங்களை கையில் எடுத்தவர்கள் உடனடியாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், ”கலரத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு, மத்திய அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு நாளை நிவாரணம் அறிவிக்கப்படும்” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், மணிப்பூர் மாநில டிஜிபியாக ராஜீவ் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.ஆர்.பி.எப். ஐ.ஜியாக இருந்த ராஜீவ் சிங் மணிப்பூர் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.