இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய். தென்கொரியா நாட்டை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 5ஆம் தேதி) பாகிஸ்தானில் இருக்கும்  ஹூண்டாய் நிறுவனம் என்ற பெயரிலுள்ள ட்விட்டர் கணக்கில் காஷ்மீர் தொடர்பாக பதிவு ஒன்று போடப்பட்டிருந்தது. இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் பலரும் இந்தப் பதிவை மேற்கோள் காட்டி தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் ஹூண்டாய் நிறுவனத்தை இந்தியர்கள் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் மீண்டும் ஒரு மன்னிப்பு பதிவை செய்துள்ளது. அதில், “ஹூண்டாய் நிறுவனத்தின் வணிக கொள்கையின்படி எந்தவித அரசியல் மற்றும் மதம் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம். ஆகவே அந்தப் பதிவு ஹூண்டாய் மோட்டர்ஸ் நிறுவனத்தின் கொள்கைக்கு எதிரானது. இந்த காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள ஒரு தனியார் டீலர் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது. அது எங்களுடைய கவனத்திற்கு வந்தவுடன் நாங்கள் அதை நீக்கிவிட்டோம். 






இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் பார்த்து கொள்வோம். ஹூண்டாய் இந்தியா நிறுவனத்திற்கும் அந்த டீலருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆகவே இதற்கும் ஹூண்டாய் இந்தியாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் நீண்ட நாட்களாக தொழில் செய்து வருகிறது. இந்தப் பதிவு  தொடர்பாக இந்திய மக்களின் உணர்வுகளுக்கு காயம் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அதற்கு நாங்கள் வருந்துகிறோம். எப்போதும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம்” எனப் பதிவிட்டுள்ளது. 


முன்னதாக கடந்த 6ஆம் தேதி ஹூண்டாய் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், ““ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருந்து வருகிறோம். மேலும் இந்திய தேசத்தை நாங்கள் மதித்து வருகிறோம். அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் எங்கள் நிறுவனத்தை பெயரை பயன்படுத்தி போடப்பட்ட ஒரு சமூக வலைதள பதிவிற்கு ஹூண்டாய் இந்தியாவை தொடர்பு படுத்துவது மிகவும் தவறான ஒன்று. 






இந்தியா எங்களுக்கு இரண்டாவது தாய்நாடு. ஆகவே எப்போதும்  இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அதுபோன்ற கருத்துகளை நாங்கள் ஏற்கவும் மாட்டோம். இந்தியா நாட்டு மற்றும் அதன் குடிமக்களின்  முன்னேற்றித்திற்கு தொடர்ந்து உழைத்து கொண்டிருப்போம் ” எனப் பதிவிட்டிருந்தது. 


மேலும் படிக்க:சர்ச்சை சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட கே.எஃப்.சி.. ! பிரச்சனையை கிளப்பிய ஃபேஸ்புக் போஸ்ட்..