இந்தியாவில் செயல்பட்டு வரும் முக்கியமான உணவு நிறுவனங்களில் ஒன்று கே.எஃப்.சி. இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் கடைகளை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் கடந்த 5-ஆம் தேதி கேஎஃப்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் கணக்கில் இருந்து ஒரு பதிவு ஒன்று போடப்பட்டுள்ளது. அந்தப் பதிவு பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து கேஎஃப்சி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. 


கடந்த 5ஆம் தேதி கேஎஃப்சி நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில், “வரும் ஆண்டுகளில் உங்களுக்கு அமைதி கிடைக்கும்” என்று பதிவிட்டுள்ளது. அத்துடன் காஷ்மீரிகளுக்கு காஷ்மீர் என்ற படத்தையும் கூட சேர்ந்து பதிவிட்டிருந்தது. இந்தப் பதிவிற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு வந்தது. குறிப்பாக சிலர் கேஎஃப்சியை புறக்கணிக்க வேண்டும் என்ற வகையில் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.






இந்நிலையில் கேஎஃப்சி நிறுவனம் ஒரு மன்னிப்பு பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “இந்தியாவிற்கு வெளியே இருக்கும் எங்களுடைய கணக்கு ஒன்றில் போடப்பட்டிருந்த பதிவிற்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் எப்போதும் இந்தியாவை நாங்கள் எப்போதும் மதிப்போம். இந்திய மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றுவோம்” எனப் பதிவிட்டுள்ளது. 


முன்னதாக காஷ்மீர் சுதந்திரம் தொடர்பாக ஹூண்டாய் நிறுவனத்தின் பெயரில் ஒரு போலி கணக்கில் பதிவு ஒன்று போடப்பட்டிருந்து. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் இதற்கு ஒரு விளக்கம் அளித்திருந்து. அதில்,”ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருந்து வருகிறோம். மேலும் இந்திய தேசத்தை நாங்கள் மதித்து வருகிறோம். அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போடப்பட்ட ஒரு சமூக வலைதள பதிவிற்கு ஹூண்டாய் இந்தியாவை தொடர்புபடுத்துவது மிகவும் தவறான ஒன்று. 


இந்தியா எங்களுக்கு இரண்டாவது தாய்நாடு. ஆகவே எப்போதும்  இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அதுபோன்ற கருத்துகளை நாங்கள் ஏற்கவும் மாட்டோம். இந்தியா நாட்டு மற்றும் அதன் குடிமக்களின்  முன்னேற்றித்திற்கு தொடர்ந்து உழைத்து கொண்டிருப்போம் ” எனப் பதிவிட்டிருந்து.






அதைத் தொடர்ந்து தற்போது கேஎஃப்சி நிறுவனமும் தற்போது இதே சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: `தமிழர்களின் உணர்வைத் தூண்டுகிறது காங்கிரஸ்’ - நாடாளுமன்றத்தில் கொதித்த பிரதமர் மோடி!