இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக வலம் வருபர் முகேஷ் அம்பானி. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் என்று பல முக்கியமான துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் இவருக்கு போட்டியாளராக கவுதம் அதானி வலம் வருகிறார். இந்த சூழலில், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற மகுடத்தையும், ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற மகுடத்தையும் முகேஷ் அம்பானியிடம் இருந்து கவுதம் அதானி பறித்துள்ளார்.


பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் இதை உறுதி செய்துள்ளது. முகேஷ் அம்பானி 87.9 பில்லியன் சொத்துக்களுடன் உலகிலேயே 11வது பணக்காரராக உள்ளார். கவுதம் அதானி 88.5 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகிலேயே 10வது பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.




முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளியதன் மூலமாக இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர், ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் சாங்பெங் ஜாவோ படைத்திருந்தார். அதானி, அம்பானிக்கு பிறகு 86 பில்லியனுடன் அவர் 12வது இடம் பிடித்துள்ளார்.


கவுதம் அதானி துறைமுகங்கள், சுரங்கங்கள் மற்றும் பசுமை ஆற்றல் ஆகியவற்றில் தனது முதலீடுகளை செலுத்தியுள்ளார். கடந்தாண்டு அதானிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. நிலக்கரி சுரங்கங்கள் மட்டுமின்றி விமான நிலையங்கள், தரவுகள் மையங்கள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றிலும் அதானி நிறுவனம் தனது முதலீடுகளை செலுத்தி பன்மடங்கு லாபம் கண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அதானியின் பங்கு மதிப்பு 600 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது.  இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர்களான அம்பானியும், அதானியும் நிலக்கரியில் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர்.




அதானி தனது குழுவை நேற்று உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக மாற்றுவதற்கு 2030ம் ஆண்டுக்குள் மொத்தம் 70 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்தாண்டு மிகப்பெரிய நிறுவனங்களான டோட்டல் எஸ்.இ., வார்பர்க் பிக்னஸ் எல்.எல்.சி. ஆகிய நிறுவனங்கள் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. ப்ரெஞ்ச் ஆயில் நிறுவனம் 20 சதவீத பங்குகளை அதானி பசுமை சக்தி நிறுவனத்தில் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.


கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 12 பில்லியன் மொத்தமாக அதிகரித்துள்ளது. ஆனால், முகேஷ் அம்பானி 2.7 பில்லியன் குறைந்துள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற சாதனையை 235 பில்லியன் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் தன் வசம் வைத்துள்ளார். இரண்டாவது பணக்காரர் என்ற பெருமையை அமேசான் நிறுவன முன்னாள் எஸ்.இ.ஓ. ஜெப் பெசோஸ் 183 பில்லியன் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட், நான்காவது இடத்தில் பில்கேட்ஸ் உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண