இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ஐந்து கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக அம்மாவட்ட துணை ஆணையர் தகவல் தெரிவித்தார்.


ரூ.5 கோடி நிவாரணம்


இமாச்சலப் பிரதேசத்தில் வரலாறு காணாத கன மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பிற பாதிப்புகள் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதில் மிகவும் பாதிக்கபட்ட மாவட்டமாக குலு மாவட்டம் உள்ளது.


"குலு மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கி வருகிறது. வீடு, கடைகள் உள்ளிட்ட வருமான ஆதாரங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 1,700 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான குடும்பங்களுக்கு மொத்தமாக ஐந்து கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது” என்று குலுவின் டிசிபி அசுதோஷ் கார்க் கூறினார்.



மழை மற்றும் நிலச்சரிவுகள்


"இன்னும், வருவாய் துறை ஊழியர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் நிவாரணத் தொகைகளை விநியோகித்து வருகின்றனர்," என்று கார்க் மேலும் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், இமாச்சலப் பிரதேசம் மழையினால் பெரும் நிதி மற்றும் உள்கட்டமைப்பு இழப்புகளை சந்தித்துள்ளது.


இடைவிடாத மழை பல நிலச்சரிவுகளுக்கும், திடீர் வெள்ளத்திற்கும் வழிவகுத்தது. இது அம்மாநிலத்தில் பல இடங்களை பாதித்ததோடு, மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.


தொடர்புடைய செய்திகள்: IND Vs WI Test: ஆஹா..! பொறுப்பான ஆட்டத்தால் டஃப் கொடுக்கும் மேற்கிந்திய தீவுகள்.. இந்தியா 209 ரன்கள் முன்னிலை


முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு


இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை மற்றும் வெள்ளப் பேரிடர்களை மாநிலம் சந்தித்துள்ளதாக சனிக்கிழமை தெரிவித்தார். மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 8,000 கோடி ரூபாயை எட்டும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்றார் முதல்வர். 



மத்திய அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்


“மத்திய குழு மாநிலத்திற்கு வந்துள்ளது. 2022-23 பேரிடர் நிதியில் நிலுவையில் உள்ள 315 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கோரியுள்ளோம். 8,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் சாலைகள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை மீட்டெடுக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம், ”என்று முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.


மேலும் இந்த பேரிடர் சூழ்நிலையில் இமாச்சலத்திற்கு மத்திய அரசிடமிருந்து உடனடி நிவாரணம் தேவை என்று முதல்வர் கூறினார். தொடர் கனமழை எச்சரிக்கையில், குழுக்கள் தயாராக இருப்பதாகவும், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதே முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்தார்.